குன்றத்தூர்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 15 ஆண்டு களுக்குப் பிறகு, தற்போது தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது.
செம்பரம்பாகம் ஏரி மொத்தம் 6,303 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும். இந்த ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடியாகும். நீர்மட்டம் 24 அடியாகும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இந்த ஏரி உள்ளது. இந்த ஏரி நீரை நம்பி, 38 கிராமங்களில் விவசாயம் நடைபெற்று வந்தது. தற்போது திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம், பழந்தண்டலம், சிறுகளத்தூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும், நீரின் கொள்ளளவை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக் கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஏரியை தூர்வார தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதன்படி கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரும் பணி பூமி பூஜையுடன் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார்.
மேலும் இந்த ஏரியை தூர்வாருவதன் மூலம் அரசுக்கு ரூ.191.27 கோடி வருமானம் கிடைக்கும். இத்திட்டத்தின்படி 6,303 ஏக்கர் பரப்பளவுக்கு ஒரு மீட்டர் ஆழத்துக்கு தூர்வாரப் படும். இந்த பணி எட்டு ஆண்டுகள் நடைபெறும். மொத்தம் 25.30 லட்சம் லோடு மண் வெளியேற்றப்பட்டு, பகுதி பகுதியாக பணி மேற் கொள்ளப்பட உள்ளது.
இந்த பணியால் கூடுதலாக 56.50 கோடி லிட்டர் தண்ணீரை தேக்கி வைக்கலாம் என பொதுப் பணி துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.