பரமக்குடி
வெள்ளை மனம் இல்லாததால்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அதிமுக சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, முன்னாள் எம்பி அன்வர்ராஜா, எம்எல்ஏக்கள் சதன்பிரபாகர்(பரமக்குடி), நாகராஜன்(மானாமதுரை), மாணிக்கம் (சோழவந்தான்), அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி உள்ளிட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதல்வர் பழனிச்சாமி வெளிநாட்டுப் பயணம் மூலம் தொழில் வளர்ச்சியையும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்த, அமைச்சர், அதிகாரிகள் கொண்ட குழுவாகச் சென்று வழிகாட்டியுள்ளார்.
இதன்மூலம் முதற்கட்டமாக ரூ.8.300 கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
ஆனால், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், வெள்ளை மனம் இல்லாததால், வெள்ளை அறிக்கை கேட்கிறார். திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோன்ற தொழில் முதலீடுகளை பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
அதிமுக அரசின் சாதனைகளை திமுகவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிமுக அரசு எந்த சாதனைகளை செய்தாலும் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்பார். இனி எந்த மாயத் தோற்றமும் தமிழக மக்களிடம் எடுபடாது" என்றார்.