கடலூர்
கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொழில்துறை அமைச்சர் சம்பத் கலந்துகொண்டு பாசன வாய்க்கால்களில் தண்ணீரைத் திறந்தார்.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரி ஆகும். இதன் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. இதனால் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணைக்கு வந்தது. கல்லணையிலிருந்து ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 21-ம் தேதி கீழணைக்கு வந்தது. கீழணையில் அன்று இரவே வடவாறு வழியாக வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக குறைந்திருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தது. ஏரியின் கொள்ளளவு அதிகரித்ததால் ஏரியில் இருந்து பாசனத்துக்கு விவசாயிகள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் இன்று (செப்.11) வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வீராணம் ஏரி கந்தகுமாரனில் உள்ள ராதா வாய்க்காலில் நடைபெற்ற தண்ணீர் திறப்பு விழாவுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். தொழில்துறை அமைச்சர் சம்பத் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
முதல்கட்டமாக ராதா வாய்க்கால் மதகு வழியாக விநாடிக்கு 10 கனஅடியும், வீராணம் புதிய மதகில் விநாடிக்கு 24 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து வீராணம் ஏரியின் கீழ் கரை மற்றும் மேல் கரைகளில் 34 மதகுகள் வழியாக மொத்தம் 400 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கீழணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்கும் அமைச்சர் சம்பத்
இதனைத் தொடர்ந்து கீழணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கீழணையில் இருந்து வடவாறு, வடக்கு ராஜன், தெற்கு ராஜன் வாய்க்கால்கள், குமுக்கி மண்ணியார் வாய்க்கால் உள்ளிட்ட அனைத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. தொழில்துறை அமைச்சர் சம்பத் திறந்து வைத்தார்.
வடவாற்றில் விநாடிக்கு 1800 கனஅடி, வடக்குராஜன் வாய்க்கால்லில் விநாடிக்கு 400 கனஅடி, தெற்கு ராஜன்ராஜன் வாய்க்காலில் 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் கடலூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் 80 ஆயிரத்து 47 ஏக்கர் பாசனம் பெறும்.
கடந்த பல ஆண்டுகளாக விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பு விழா என்பது கீழணையில் முதலில் தண்ணீர் திறந்து வைத்தபின்புதான், வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து வைப்பது வழக்கம். இந்த வழக்கத்தை முதல் முறையாக பொதுப்பணித் துறையினர் மாற்றி முதலில் ஏரியைப் பாசனத்துக்கு திறந்துவிட்டு, அதன் பிறகு கீழணையில் தண்ணீர் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.