விருதுநகர்,
டிடிவி தினகரனுக்கு இனி எந்த அரசியல் வாழ்க்கை கிடையாது அவர் கூடாரம் விரைவில் காலியாகிவிடும். அமமுகவில் இருந்து விலகி டிடிவி தினகரன் விரைவில் திமுகவில் இணைவார் என விருதுநகரில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வருடன் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று (புதன்கிழமை) தனது சொந்த மாவட்டமான விருதுநகருக்கு வருகை தந்தார்.
அப்போது அவருக்கு அதிமுக சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "பால்வளத்துறையை வளர்ச்சி நோக்கி கொண்டு செல்லவே இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று வந்தோம்.
சேலத்தில் மிகப்பெரிய பால்பண்ணை அமைக்க பூர்வாங்கப் பணி இன்று தொடங்குகிறது, கால்நடை ஆராய்ச்சி மையம், பால்பண்ணை இனவிருத்தி மையம் என மிகப்பெரிய ஒருங்கிணைந்த பால்பண்ணை அமைக்கப்படும்.
தமிழகத்தில் 25 மாவடங்களில் பிரதான தொழிலாக பால் உற்பத்தி வளர்ந்துள்ளது. சேலம் பால்பண்ணை கட்டமைப்புக்கு மட்டும் மிகப்பெரிய தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒர் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது, வரவேற்கத்தக்கது, மகிழ்ச்சி.
73 ஆண்டுகள் வரலாற்றில் வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை அழைத்து அந்நிய முதலீட்டை கொண்டு வந்த ஒரே முதல்வர் பழனிச்சாமி.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து மு.க.ஸ்டாலின். வெள்ளை அறிக்கை கேட்கிறார். வெள்ளை அறிக்கை என்ன? மஞ்சள் அறிக்கையே கொடுக்கலாம். இந்தியாவிலேயே தொழில்துறையில் முதல் மாநிலமாக மாற்றும் அளவிற்கு முதல்வர் செயல்பட்டு வருகிறார்.
அந்தமானில் தொழில் துவங்கவில்லை, தமிழகத்தில் தான் துவங்குகிறோம், ஏமாற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை, ஏமாற்றும் எண்ணத்தில் தமிழர்களின் மானத்தை, உழைப்பை, உயிரை வைத்து சம்பாதித்தவர்கள் திமுகவினர்தான்.
வெளிநாடு சுற்றுபயணம் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி கேளுங்கள் தமிழக முதல்வர் அதற்கு உரிய விளக்கம் அளிப்பார். மேலும், மு.க.ஸ்டாலின் என்ன கணக்குப்பிள்ளையா? அவரிடம் கணக்கு காண்பிக்க, அனைத்து திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்" எனக் கூறினார்.
இறுதியாக, டிடிவி தினகரனுக்கு இனி எந்த அரசியல் வாழ்க்கை கிடையாது அவர் கூடாரம் காலியாகி விரைவில் திமுகவில் சேர்ந்துவிடுவார் என்றார்.