தமிழகம்

விருதுநகரில் கட்டிடங்களுக்குள் சிக்கிக்கொண்ட திருத்தேர்: தீயணைப்புத் துறையினரால் மீட்பு

இ.மணிகண்டன்

விருதுநகர்

விருதுநகரில் உள்ள அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டத்தின்போது தெற்கு ரக வீதியில் கட்டிடங்களுக்குள் திருத்தேர் சிக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகரில் உள்ள அருள்மிகு சொக்கநாத சுவாமி திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகள் பழமையானது. இத்திருக்கோயிலில் 50-வது ஆவணிப் பெருந்திருவிழா பிரம்மோற்சவம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. 2-ம் தேதி திருக்கொடியேற்ற விழாவும் அதைத்தொடர்ந்து தினந்தோறும் பல்லக்கு உலவும் நடைபெற்றன.

திருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று அருள்மிகு சொக்கநாத சுவாமிக்கும்- அருள்மிகு மீனாட்சியம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, திருவிழாவின் 9-ம் நாளான இன்று காலை 8.40 மணிக்கு திருத்தேரோட்டம் தொடங்கியது.

முன்னதாக சிவனுக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, திருத்தேரோட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் கலந்துகொண்டு வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். நான்கு ரத வீதிகள் வழியாக திருத்தேர் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பஜார் வழியாக வந்தபோது இரு இடங்களில் தேர் வருவது சிரமமாக இருந்தது. குறுகிய சாலை காரணமாக தேரோட்டம் தாமதமானது. அதைத்தொடர்ந்து தெற்கு ரத வீதியில் பிற்பகல் 1 மணி அளவில் திருத்தேர் வந்தபோது இருபுறமும் உள்ள கட்டிடங்களுக்கு இடையே தேர் சிக்கிக்கொண்டது. இதனால், தேரை நகர்த்த முடியவில்லை. அதையடுத்து, தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு கட்டிடங்களின் போர்டிகோ இடிக்கப்பட்டது.

அதோடு, திருத்தேரில் மரச் சட்டங்கள் இயந்திர ரம்பங்களால் அறுக்கப்பட்டு தேரின் அகலம் சுமார் 4 அடி வரை குறைக்கப்பட்டது. அதன்பின் மாலை 5.15 மணி அளவில் மீண்டும் தேர் இழுக்கப்பட்டு சுமார் 6.15 மணிக்கு திருத்தேர் நிலையை அடைந்தது. புதிதாக ரூ.50 லட்சத்தில் திருத்தேர் செய்யப்பட்டு முதன்முதலாக அருள்மிகு சொக்கநாத சுவாமி திருக்கோயில் பெரியதேர் வீதி உலா நடைபெற்றது. கட்டிடங்களுக்குள் சிக்கி தேரோட்டம் தடைபட்டது பக்தர்களிடையே மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT