கோவை
கோவையில் 3-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை, முதல் இரண்டு மனைவிகள் சேர்ந்து அடித்து உதைத்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கோவை சூலூர் அருகேயுள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் அரங்கன் என்ற அரவிந்த் என்ற தினேஷ் (26). இவர், தென்னம்பாளையம் அருகேயுள்ள ராசிபாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பேட்டர்ன் மேக்கராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், திருப்பூர் கணபதி பாளையத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும், கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர், சில வாரங்களில் கருத்து வேறுபாடு காரணமாக, பிரியதர்ஷினி கணவரைப் பிரிந்து தன் தந்தை வீட்டுக்குச் சென்று விட்டார்.
பின்னர் தினேஷ், கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்த அனுப்பிரியா(23) என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். அனுப்பிரியாவுக்கு முன்னரே திருமணமாகி 2 வயதில் குழந்தை உள்ளது. அவர் முதல் கணவரை விவகாரத்து செய்து, 2-வதாக தினேஷைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர், அனுப்பிரியாவும், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவரைப் பிரிந்து தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்.
இந்நிலையில் தினேஷ் 3-வது திருமணத்துக்குப் பெண் தேடி வந்துள்ளார். இதையறிந்த முதல் மனைவி பிரியதர்ஷினி மற்றும் 2-வது மனைவி அனுப்பிரியா ஆகிய இருவரும் சூலூருக்கு நேற்று வந்தனர். தினேஷ் பணியாற்றும் தொழிற்சாலைக்கு அவரது தந்தையை அழைத்துக்கொண்டு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சூலூர் காவல்துறையினர், அங்கு சென்று இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களையும் காவல் நிலையத்துக்கு வருமாறு கூறிவிட்டுச் சென்றனர்.
அப்போது தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்த தினேஷை, அவரது இரண்டு மனைவிகளும் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சூலூர் காவல்துறையினர் மற்றும் பேரூர் மகளிர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.