ஏ.எஃப்.டி. மில்: கோப்புப்படம் 
தமிழகம்

புதுச்சேரியில் செயல்படாத பஞ்சாலைக்கு ஆலோசனைக் குழு: ஆண்டுக்கு ரூ.13 லட்சம் வீதம் ஐந்தரை ஆண்டுகளாக ஊதியம் அளிப்பு; ஆர்டிஐ மூலம் அம்பலம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி

இயங்காத ஏ.எஃப்.டியிலுள்ள பத்து ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு ரூ.13 லட்சம் ஊதியம் ஐந்தரை ஆண்டுகளாக வழங்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர், ஆளுநரிடம் புகார் தரப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஏ.எஃப்.டி மில்லின் மூன்று யூனிட்டுகளும் முழுவதும் மூடப்பட்டு மொத்த நஷ்டத் தொகை ரூ.575 கோடியாக உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

இச்சூழலில் செயல்படாத பஞ்சாலைக்கு பத்து ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இருப்பதும், அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 13 லட்சம் ஊதியம் கடந்த 2014 முதல் இதுவரை தரப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர், ஆளுநரிடம் இன்று (செப்.10) ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி மனு அளித்தார்.

இதையடுத்து, ரகுபதி கூறுகையில், "புதுச்சேரி ஏ.எஃப்.டியானது கடந்த 5.11.2013 முதல் 'லே ஆப்' அடிப்படையில் ஊதியம் தரப்படுகிறது. இந்நிலையில் செயல்படாத பஞ்சாலைக்கு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் இருப்பதும் அவர்களுக்கும் ஊதியம் தரப்படுவதாகவும் தெரிந்தது. அதையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டோம். அதன்படி ஏ.எஃப்.டிக்கு புதுச்சேரி அரசால் ஆலோசனைக்குழு கடந்த 27.1.2014-ல் நியமிக்கப்ப்டடது. இக்குழுவில் ஓய்வு பெற்ற சின்னதுரை, வாழ்முனி, சத்திய சீலன், இளங்கோவன், கபிரியேல், வீரமுத்து, அம்மைநாதன் ஆகியோரும், பணியில் உள்ள ஜெயபாலன், ரவி, முத்தமிழன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவில் பணி ஓய்வு பெற்றோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.300 வீதம் மாதம் ரூ.7800 கவுரவத் தொகையாகத் தரப்படும். பணியிலிருக்கும் மூவருக்கு முழு ஊதியம் தரப்படும் என்று தெரிவித்தனர். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 13 லட்சம் வீதம் ஐந்தரை ஆண்டுகளாக ஊதியம் தரப்பட்டுள்ளது. மூடப்பட்ட ஆலைக்கு ஆலோசனைக் குழு எதற்கு எனத் தெரியவில்லை. செயல்படாத பஞ்சாலைக்கு நியமிக்கப்பட்ட இக்கமிட்டி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர், ஆளுநரிடம் மனு தந்துள்ளோம்," என்று தெரிவித்தார்.

செ.ஞானபிரகாஷ்

SCROLL FOR NEXT