கும்பகோணம்
சென்னை கபாலீஸ்வரர் கோயில் சிலை முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் திருமகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகத்துக்காக திருப்பணி நடைபெற்றபோது புன்னைவனநாதர் சந்நிதியில், சிவனுக்கு பூஜை செய்யும் மரகதத் தால் ஆன மயில் சிலை இருந்தது. இந்தச் சிலை மாற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த மயில் சிலையைத் திருடி விற்றுவிட்டதாக ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் அளித்த புகாரின்பேரில், கோயிலில் அப் போது செயல் அலுவலராக பணி யாற்றிய, கூடுதல் ஆணையர் திருமகளை கடந்த 16.12.2018 அன்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, கூடுதல் ஆணை யர் பொறுப்பில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருமகள், பின் னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், ஜாமீன் நிபந் தனையை தளர்த்த வேண்டும் என கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, கடந்த 3-ம் தேதி விசா ரணைக்கு வந்தபோது திருமகளும், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு விசாரணை அதிகாரி பொன் மாணிக்கவேலுவும் ஆஜராகி தங்க ளுடைய வாதங்களை நீதிபதி முன் வைத்தனர். அப்போது, நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டபோது, திருமகள் 2 முறை கையெழுத்திட வராததால் அவரது நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என பொன் மாணிக்கவேல் கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி செப்.9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதையடுத்து, இவ்வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது திருமகளுக்கு வழங் கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் திருமகள் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
டிஎஸ்பி காதர் பாட்சா வழக்கு
அருப்புகோட்டை சிலை கடத் தல் வழக்கில் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்சா, தனக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை தளர்த்த வேண்டும் என கோரியும், அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு விசாரணை அதிகாரி பொன் மாணிக்கவேலுவும் மனு தாக்கல் செய்திருந்தனர். இதுதொடர்பான விசாரணை நேற்று கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.