படம்: எம்.சாம்ராஜ். 
தமிழகம்

ப.சிதம்பரம் கைதைக் கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: 3 அமைச்சர்கள், 3 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை

செய்திப்பிரிவு

புதுச்சேரி

ப.சிதம்பரம் கைதைக் கண்டித்து காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 3 அமைச்சர்கள், 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடங்கி முதன்மை நிர்வாகிகள் பலரும் பங்கேற்கவில்லை. தொண்டர்கள், நிர்வாகிகள் வருகை குறைவாக இருந்ததால் இரண்டு மணி நேரம் தாமதமாக ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் ஆளும் அரசாக காங்கிரஸ் உள்ள சூழலில் சிதம்பரம் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பல நாட்கள் கடந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடக்கும் என்று காங்கிரஸ் கமிட்டி தெரிவித்திருந்தது.

கட்சி அலுவலகத்துக்குப் போதிய அளவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவில்லை. இதையடுத்து ஊர்வலமாகச் செல்லும் நிலை கைவிடப்பட்டு மாலை 6 மணியளவில் தலைமை தபால் நிலையம் அருகே காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத், முதல்வர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், அமைச்சர் கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

அமைச்சர்களில் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் பங்கேற்கவில்லை. அதேபோல் எம்எல்ஏக்களில் லட்சுமி நாராயணன், தனவேலு, தீப்பாய்ந்தான் ஆகியோரும் வரவில்லை. கூட்டத்துக்கு வந்திருந்த எம்எல்ஏ விஜயவேணியும் பாதியிலேயே புறப்பட்டார். எம்எல்ஏக்களில் அனந்தராமன், ஜெயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகிகள், தொண்டர்கள் குறைவாகவே பங்கேற்றனர்.

போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "ப.சிதம்பரத்தை யாரும் குறை கூறவே முடியாது. அவர் விதிமுறைப்படிதான் செயல்படுவார். திட்டமிட்டுப் பழிவாங்கப்பட்டுள்ளார். இது எதிர்பார்த்ததுதான். சிதம்பரத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுக்கும் இச்சூழல் ஏற்படும் வாய்ப்புண்டு. எங்களுக்கு பதவி வரும்போகும்- கட்சியே முக்கியம்" என்று குறிப்பிட்டார்.

செ.ஞானபிரகாஷ்

SCROLL FOR NEXT