தமிழகம்

தலைமை நீதிபதி தஹில் ரமானியின் இடமாற்றம் பாஜகவின் திட்டமிட்ட பழிவாங்கல்: திருமாவளவன்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை

தலைமை நீதிபதியான தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியது, பாஜகவின் பழிவாங்கும் செயலைக் காட்டுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி, தன்னை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்வதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 1982-ம் ஆண்டு மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்த விஜய கம்லேஷ் தஹில் ரமானி, தனது தந்தையும், பிரபல வழக்கறிஞருமான எல்.வி.கப்சேவிடம் தொழில் கற்றவர் ஆவார்.

இந்நிலையில் இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தஹில் ரமானி குஜராத்தில் பணியாற்றியபோது மோடி அல்லது அமித் ஷாவுக்கு எதிராகச் செயல்பட்டார் என்ற ஒரே காரணத்துக்காக, அவர் பழிவாங்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழக உயர் நீதிமன்றம் என்பது இந்தியாவின் உயரிய நீதிமன்றங்களில் ஒன்று. இங்கு பணியாற்றிய அவரை, திடீரென்று வெறும் 3 நீதிபதிகளை மட்டுமே கொண்டிருக்கிற நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றுவது என்பது திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை.

உள்துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசிய பிறகும் எழுவர் விடுதலையில் காலம் தாழ்த்துவது வேதனை அளிக்கிறது. 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். பாஜக அரசின் 100 நாள் ஆட்சி, சிறுபான்மையினருக்கு எதிராகவே அமைந்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து வரும் 12-ம் தேதி போராட்டம் நடத்தப்படும்'' என்று திருமாவளவன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT