தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் வெப்பச்சலனம், மேலடுக்கு சுழற்சி, தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக மழை பெய்து வருகிறது. இதன்மூலம் மழைநீர் தேங்கும் பகுதிகளில் சுகாதாரமற்ற சூழ்நிலையால் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ள நிலையில் தடுப்பது குறித்த ஒரு அலசல்.
மழைக்காலம் போன்ற காலகட்டங்களில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் அதிகமாகப் பரவும் வாய்ப்பு அதிகரிக்கும். டெங்கு காய்ச்சலுக்கு தமிழக அரசின் மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டாலும், உரிய நேரத்தில் கவனிக்காமல் தாமதமாக மருத்துவமனைக்குச் செல்வது போன்ற காரணத்தால் உயிரிழப்புகள் நேரும் அபாயம் ஏற்படுகிறது.
டெங்கு காய்ச்சலைத் தடுக்க, பரவாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. கூட்டம் போடுகிறார்கள் அமைச்சர்கள் நேரடியாக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள். சென்னை மாநகராட்சி பிரத்யேகமாக இதற்கென பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வீடுதோறும், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்யக் குழுக்கள் அமைத்துள்ளனர்.
டெங்கு பரப்பும் கொசுக்கள் வளரும் சூழ்நிலையுடன் இருக்கும் கட்டிடங்களுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை அபராதம் என அறிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வண்ணம் பல தகவல்கள் கொண்டு செல்லப்பட்டாலும் அது போதாது. மேலும் அதிக அளவில் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
டெங்கு கொசுக்கள் வளரும் சூழ்நிலையை மனிதர்கள்தான் உருவாக்குகிறார்கள். மழைநீர், சுத்தமான நீர் தேங்கும் இடங்களில்தான் டெங்கு கொசுக்கள் வளர்கின்றன என ஆய்வு கூறுகிறது. அப்படியானால் மழை நீர் தேங்கும் இடங்களில் அவற்றைத் தேங்கும் வகையில் விட்டு வைப்பதும், ஏசி தண்ணீர் தேங்கும் இடம், பயன்பாட்டுக்காக அதிக நாட்கள் தண்ணீரைத் தேக்கி வைப்பது போன்ற காரணங்களால் தண்ணீரில் கொசுக்கள் வளர்கின்றன என்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ஒருவரிடம் கேட்டபோது, “அரசின் தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் பொதுமக்களின் பங்களிப்பும் முக்கியம். நாம் வசிக்கும் பகுதி, வீட்டைச் சுற்றியுள்ள இடங்கள், மொட்டை மாடி, பயன்படுத்தப்படாத குடியிருப்பின் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் போட்டு வைத்திருக்கும் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பொருட்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
டெங்கு கொசுக்கள் பகலில்தான் கடிக்கும். பகலில் கடிக்கும் டெங்கு கொசுக்களால் அதிகம் பாதிக்கப்படுவது பள்ளிக் குழந்தைகளும் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்யும் நிலையில் இருப்பவர்களும்தான். ஆகவே பள்ளிக்கூடங்கள், அதைச் சுற்றியுள்ள இடங்கள், அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம்.
பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம். அவர்களது சுற்றுப்புறம் மட்டுமல்ல, மற்ற பகுதிகளிலும் கொசுக்களை உற்பத்தி செய்யும் காரணிகளைக் கண்டால் தாராளமாக மாநகராட்சி அதிகாரிகளுக்குப் புகார் அளிக்கலாம். அதேபோன்று பள்ளிகளில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதால் பள்ளிகள் தூய்மையாக இருப்பதைப் பெற்றோரும் கண்காணிக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சல் வருவதைத் தடுக்க தடுப்பு மருந்து இல்லை. ஆனால் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுக்களை உற்பத்தியாகாமல் தடுக்கலாம். அதுவே டெங்கு காய்ச்சலிலிருந்து நம்மைக் காக்கும் முக்கிய நடவடிக்கை ஆகும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவர் அளிக்கும் சிகிச்சையும் தக்க நேரத்தில் உரிய மருத்துவமனையை அணுகுவதும் அவசியமாகும்.
அதே நேரம் ஆங்கில மருந்துகளை உண்ணும் நேரத்திலேயே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தி ரத்த அணுக்களை அதிகரிக்கும் இயற்கையான நிலவேம்பு சூரணத்தைக் காய்ச்சி கசாயமாக அருந்தலாம்.
வெறுமனே நிலவேம்பு பொடியை காய்ச்சி கசாயமாக அருந்துவதால் பயனில்லை. இதற்கென தயாரிக்கப்படும் நிலவேம்பு சூரணம் சித்த வைத்திய மருந்துக் கடைகளில் கிடைக்கும். அவற்றை வாங்கி காய்ச்சிக் குடித்து வரவேண்டும்.
டெங்கு காய்ச்சல் தற்போது சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் பரவ ஆரம்பித்துள்ளது. வரும் காலங்கள் மழைக்காலம் என்பதால் அது அதிகரிக்க வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்களை வளர விடாமல் தடுப்பதும் அழிப்பதும் நம்மைக் காக்கும் முறையான நடவடிக்கை ஆகும். அதற்கு அதுகுறித்த விழிப்புணர்வை நாம் அடையவேண்டும். மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.