தஞ்சாவூர்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தங்கள் கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க இருப்பதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸின் ஹெச்.வசந்தகுமார், மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால், நாங்குநேரி தொகுதி காலியாக உள்ளது. அதேபோன்று, விக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி, உடல்நலக் குறைவால் காலமானதால், விக்கிரவாண்டி தொகுதியும் காலியாக உள்ளது.
காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தங்களின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று (செப்.8) தேமுதிக தொண்டர் இல்லத் திருமண விழாவில் விஜய பிரபாகரன் கலந்துகொண்டார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், "தலைவர் விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். அடுத்த வாரம் திருப்பூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்துகொள்கிறார். முப்பெரும் விழா அவர் தலைமையில்தான் நடைபெற உள்ளது. அன்றைக்குத் தொண்டர்கள் அனைவரும் தலைவரை உற்சாகமாகப் பார்க்கலாம்.
விஜயகாந்த்: கோப்புப்படம்
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்கள்
நாடாளுமன்றத் தேர்தலில் அமைத்த கூட்டணி தொடரும் என்றே, தேமுதிக பொருளாளர் கூறியிருக்கிறார். இந்தக் கூட்டணி தொடரும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், எங்களின் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம்" என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.