தமிழகம்

மதுரையில் கணினி விற்பனை மையத்தில் பயங்கர தீ விபத்து: ரூ.6 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

செய்திப்பிரிவு

மதுரை,

மதுரை வடக்குவெளி வீதியில் ஜெகன்நாதன் என்பவருக்குச் சொந்தமான கணினி விற்பனையகத்தில் நேற்று இரவு (ஞாயிறு) தீப்பிடித்தது. இதில் கணினிகள், கணினி உதிரி பாகங்கள், கணினி சார்ந்த எலக்ட்ரானிக் உபகரணங்கள் எரிந்து சாம்பலாகின. ரூ.6 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானதாகத் தெரியவந்துள்ளது.

மீண்டும் பற்றிய தீ..

முன்னதாக, நேற்று இரவு 9 மணியளவில் ஜெகன்நாதனின் கடைக்குள் இருந்து புகை வருவதை அருகில் இருந்த கடைக்காரர்கள் கவனித்து தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என்பதால் தீ மளமளவெனப் பரவியது.

இதனையடுத்து கூடுதலாக வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மொத்தம் 4 தீயணைப்பு வண்டிகள், 2 சிறப்பு உபகரண வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது. விடுமுறை நாள் என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

ஆனால், இன்று அதிகாலையில் மீண்டும் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

-என்.சன்னாசி

SCROLL FOR NEXT