தமிழகம்

தமிழிசைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்திருக்கலாம்: திருமாவளவன் கருத்து

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை

அரசியலில் துடிப்புடன் செயல் படும் தமிழிசைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கி இருக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கேந்திரிய வித்யாலயா பள்ளி வினாத்தாளில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கேள்வி கேட்கப்பட்டிருந்தது அதிர்ச்சி அளிக்கிறது. கல்வி காவிமயமாவதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது. இதுபோன்ற‌ வினாத்தாளை தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீவிர அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழிசைக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் ஆளுநர் பதவி வழங்கியது ஏனென்று தெரியவில்லை. அரசியலில் துடிப்புடன் செயல்படும் அவருக்கு மத்திய அமைச்சர் போன்ற பதவியை வழங்கி இருக்கலாம். ராம்ஜேத்மலானி இழப்பு அரசியல் மற்றும் சட்டத்துறைக்கு பேரிழப்பு. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கப்பட்டது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊர் திரும்பிய பிறகு அவரது அறிக்கையை பொறுத்தே விமர்சனம் செய்ய முடியும்.

ப.சிதம்பரத்தைப் போன்று மு.க.ஸ்டாலினும் கைது செய்யப்படுவார் என்று பாஜக தலைவர்கள் கூறிவருவது அவர்களுடைய ஆசையாக இருக்கலாம். ஆனால், அந்த ஆசை நிறைவேறாது என்றார்.

SCROLL FOR NEXT