த.சத்தியசீலன்
கோவை
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெருநகரமாக கோவை மாநகரம் விளங்குகிறது. பேருந்துகள், லாரிகள், கார்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் என லட்சக்கணக்கான வாகனங்கள் இயங்குகின்றன.
சத்தி சாலை, அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை போன் றவை போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளாகும். இச்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
காலை மற்றும் மாலை வேளை களில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. மாநகரச் சாலை யோரங்கள் தனியார் பேருந்துகள், கால் டாக்ஸிகள், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன நிறுத்தங்களாக மாறிவருகின்றன. பல இடங்களில் போக்குவரத்தை சீரமைக்க காவலர்களே இல்லை. மாநகரில் உள்ள 150-க்கும் மேற்பட்ட சிக்னல்களில், பல சிக்னல்கள் சரிவர இயங்குவதில்லை.
காந்திபுரம் பகுதியில் மேம்பாலம் இருந்தும் நஞ்சப்பா ரோடு, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, ஜிபி சிக்னல், லட்சுமிபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் தீர்ந்த பாடில்லை. முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் சாலை விபத்துகளும், அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டுவருகின்றன.
மாநகரில் கடந்த 2018-ம் ஆண்டு 1,333 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 154.
சட்டம் ஒழுங்கு, குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதில்லை என்பதால், தினமும் சந்திக்கும் போக்குவரத்து பிரச் சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணியில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு காவலர்களை ஈடுபடுத்துவதைப் போல, போக்குவரத்தை சீரமைப்பதற்கும் ஈடுபடுத்த வலியுறுத்துகின்றனர், போக்குவரத்து ஆர்வலர்கள்.
இது குறித்து ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் ஜி.என். வெள்ளிங்கிரி கூறியதாவது: மாநகர போக்குவரத்து காவல் பிரிவில் போதுமான அளவுக்கு காவலர்கள் இல்லை. வாகன நெரி சலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறையை பலப்படுத்துவது அவசியம்.
புதிதாக காவலர்கள் நியமிக் கும் வரை, ஓய்வு பெற்ற காவலர்களில் உடற்தகுதியுடையவர்களை தொகுப் பூதியத்தில் போக்குவரத்து பிரிவுக்கு நியமனம் செய்யலாம்.
வாகனங்கள் முறையாகச் சென்று வர வழிகாட்டும் சிக்னல்களும் சரிவர செயல்படுவதில்லை. சாலைகளில் வாகன ஆக்கிரமிப்புகளை அப்புறப் படுத்தி, காலியிடங்களில் வாகன நிறுத்தங்கள் அமைக்க வேண்டும்.
சாலை விதிகளின்படி, வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் ‘சாலை குறியீடுகள்’ கொண்ட பலகைகளோ, பதாகைகளோ எங்கும் இல்லை. அனைத்து சாலைகளிலும் சாலை குறி யீடுகளை வைக்க வேண்டும். பழுதடைந்த சிக்னல்களை விரைந்து சரி செய்ய வேண்டும். விபத்து ஏற்படுத்த காத்திருக் கும் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளையும் சீரமைக்க வேண்டும். ஆட்சியர் தலைமையில் சாலை பாதுகாப் புக் குழு கூட்டத்தை கூட்டி போக்கு வரத்து பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.போக்குவரத்து துணை ஆணையர் நியமனம் எப்போது?
மாநகர போக்குவரத்து துணைக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்தவர் சுஜித்குமார். இவர் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அந்த பொறுப்பு, குற்றப்பிரிவு துணைக் காவல் ஆணையர் பி.பெருமாளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் மாநகரக் காவல்துறையில் போக்குவரத்து துணைக் காவல் ஆணையர் பணியிடம், கடந்த 5 மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. இப்பணியிடத்தை உடனடியாக நிரப்பி, போக்குவரத்து பிரச்சினைகளில் தனிகவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகின்றனர், சமூக ஆர்வலர்கள்.