எல்.மோகன்
நாகர்கோவில்
மழை, வெள்ள பாதிப்பில் இருந்து கேரள மக்கள் இன்னும் மீளாத நிலையில் நடப்பாண்டும் ஓணம் கொண்டாட்டம் விறுவிறுப்பின்றி உள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அனுப்பப் படும் மலர்கள் விற்பனை 60 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கேரள மக்களால் விமரிசையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது அத்தப்பூ கோல மிடுவதற்காக தமிழகத்தில் இருந்து பல வண்ண மலர்கள் தினமும் டன் கணக்கில் கேரளாவுக்கு அனுப்பப்படும். இதனால் குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தை, திருநெல்வேலி, மதுரை, சத்தியமங்கலம், கோவை, கர்நாடக எல்லை பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மலர் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பலன் அடைவர்.
ஆனால், எப்போதும் இல்லாத வகையில் கடந்த 2 ஆண்டுகள் கேரளாவில் மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். கடந்த 2018-ம் ஆண்டு மழையால் ஏற்பட்ட சேதத்தை தொடர்ந்து, ஓணம் கொண்டாட் டத்தை ரத்து செய்வதாக கேரள அரசே அறிவித்தது.
நடப்பாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் வயநாடு போன்ற மலையோர பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு பாதிப்புகள் அதிகமாகின. வீடுகள் இடிந்ததால் வசிக்க இடமின்றியும், அன்றாட செலவுக்கு வருவாய் இன்றியும் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் தவிக் கின்றனர். இதற்கு மத்தியில் நாளை மறுநாள் (11-ம் தேதி) ஓணம் பண்டிகை வருகிறது. இதையொட்டி கடந்த 2-ம் தேதி முதல் கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் தொடங்கினாலும், வழக்கமான உற்சாகம் அம்மாநில மக்களிடம் இல்லை.
இதுகுறித்து குமரி மாவட்டத் தில், கேரள எல்லை பகுதியில் உள்ள பாறசாலையைச் சேர்ந்த உன்னிநாராயணன் என்பவர் கூறும் போது, ‘‘கேரள மழை வெள்ளத் தால் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட் டுள்ளனர். இதனால் பெயரளவுக்கே ஓணம் கொண்டாட முடிவு செய்துள்ளேன்’’ என்றார்.
மலர் விற்பனை மந்தம்
தோவாளை மலர்ச் சந்தை மொத்த வியாபாரி ராஜேந்திரன் கூறும்போது, ‘‘கடந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டத்தை ரத்து செய்வதாக கேரள அரசு அறி வித்ததால், முன்கூட்டியே மலர் கொள்முதலை குறைத்துவிட் டோம். ஆனால், இந்த ஆண்டு அவ்வாறு அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், ஓணத் துக்கான மலர் வியாபாரம் மந்தமாகவே உள்ளது.
அத்தப்பூ கோலமிட பயன் படுத்தப்படும் கிரேந்தி, மெர்பல் ரோஸ், சம்பங்கி, தாமரை போன்ற வண்ண மலர்களை அதிகமாக கொள்முதல் செய்துள்ள நிலையில், பாதியளவு கூட விற்பனை ஆக வில்லை. வழக்கமாக ஓணம் சீஸனில் தினமும் 15 டன் வண்ண மலர்கள் விற்பனை ஆகும். ஆனால், தற்போது இரண்டரை டன் பூக்கள் மட்டுமே கேரளா செல்கின்றன.
தோவாளையைச் சேர்ந்த உள் ளூர் விவசாயிகளால் பயிரிடப்படும் கோழிக்கொண்டை, வாடாமல்லி பூக்கள் விலை கிலோ 50 ரூபாய்க்கும் குறைவாக சரிந்துள்ளது. தமிழகம் முழுவதும் மலர்கள் விற்பனை 40 சதவீதம் மட்டுமே நடைபெறுகிறது. 60 சதவீத பூக்கள் தேக்கம் அடைந்துள்ளன’’ என்றார்.
கேரளாவை ஒட்டியுள்ள தேனி, மதுரை, தென்காசி, கோவை உள்ளிட்ட இடங்களிலும் ஓணம் மலர் விற்பனையில் விறுவிறுப்பில்லை. குமரியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் நேந்திரன் வாழைக்காய் விற்பனையும் பாதியாக சரிந் துள்ளது.