தமிழகம்

இந்திய சட்டத்துறை வரலாற்றை ராம்ஜெத்மலானி தவிர்த்து விட்டு எழுத முடியாது: ராமதாஸ் புகழாரம்

செய்திப்பிரிவு

ராம்ஜெத்மலானி மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம் ஜெத்மலானி உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இந்திய சட்டத்துறை வரலாற்றையும், அரசியல் வரலாற்றையும் ராம்ஜெத்மலானியை தவிர்த்து விட்டு எழுதி விட முடியாது. அந்த அளவுக்கு இரு துறைகளிலும் பல சாதனைகளை அவர் படைத்திருக்கிறார். பள்ளி வகுப்புகளில் இரட்டைத் தேர்ச்சி பெற்ற அவர், தமது 17-ஆவது வயதில் சட்டப்படிப்பை நிறைவு செய்தார். அதன்பின்னர் அவருக்காக விதிகள் தளர்த்தப்பட்டு 18-ஆவது வயதிலேயே வழக்கறிஞராக பணியாற்ற அனுமதிக்கப்பட்டார். அதன்பின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல முக்கிய வழக்குகளில் வாதிட்டிருக்கிறார். இந்தியாவில் 75 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய பெருமை இராம்ஜெத்மலானிக்கு மட்டுமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. சட்டக் கல்லூரி பேராசிரியராக ஏராளமான வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளை உருவாக்கிய பெருமைக்கும் ஜெத்மலானிக்கு உண்டு.

ஜெத்மலானியின் வாழ்க்கை சாகசங்கள் நிறைந்ததாகும். நெருக்கடி நிலை காலத்தின் போது, இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த ஜெத்மலானி மத்திய அரசை கடுமையாக விமர்சித்ததற்காக அவரை எப்படியும் கைது செய்து விட வேண்டும் என்று மத்திய அரசு துடித்ததும், அவற்றை முறியடித்து கனடாவுக்கு தப்பிச் சென்ற ஜெத்மலானி அங்கிருந்தவாறே நெருக்கடி நிலைக்கு எதிராக போராடியதும் இளம் அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டிய துணிச்சல் வரலாறு ஆகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்காகவும், பின்னர் 7 தமிழர்களை விடுதலை செய்வதற்காகவும் சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகளில் வாதிட்டவர். ஏழைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை இலவசமாக நடத்திக் கொடுத்த வரலாறும், பெருமையும் இவருக்கு உண்டு.

ராம்ஜெத்மலானியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் வழக்கறிஞர் சமுதாயத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’

SCROLL FOR NEXT