ஆர்.பாலசரவணகுமார்
சென்னை
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி, தன்னை மேகாலயா உயர் நீதிமன் றத்துக்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
1982-ம் ஆண்டு மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த விஜய கம்லேஷ் தஹில் ரமானி, தனது தந்தையும், பிரபல வழக்கறிஞரு மான எல்.வி.கப்சேவிடம் தொழில் கற்றவர். கடந்த 2001-ல் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக் கப்பட்ட தஹில் ரமானி, பரபரப்பாக பேசப்பட்ட கோத்ரா கலவர வழக் கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய் தவர். மும்பை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக 3 முறை பதவி வகித்த அவர், கடந்த 2018 ஆகஸ்ட் 12-ம் தேதி இந்தியாவின் பெரிய உயர் நீதிமன் றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தனது பணிக்காலத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு நிர்வாக மாறுதல்களைக் கொண்டு வந்தார்.
வரும் 2020 அக்டோபர் 2-ம் தேதியுடன் ஓய்வுபெறவிருந்த நிலையில், அவரை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எப். நாரிமன் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந் துரைத்தது. மேலும், மேகாலயா வில் பணிபுரியும் ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் கொலீஜி யம் சிபாரிசு செய்தது. தலைமை நீதிபதியுடன் சேர்த்து 2 நீதிபதிகள் மட்டுமே பணிபுரியும் சிறிய உயர் நீதிமன்றமான மேகாலயாவுக்கு தன்னை இடமாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தஹில் ரமானி, உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் விடுத்த கோரிக்கையை ஏற்க முடியாது என கொலீஜியம் நிராகரித்தது.
கொலீஜியத்தின் இந்த முடிவால் மனதளவில் வேதனை அடைந்துள்ள தலைமை நீதிபதி தஹில் ரமானி, தனது எதிர்ப்பைக் காட்டும் வகையில், பதவியை ராஜி னாமா செய்துள்ளார். இதுதொடர் பாக நேற்று முன்தினம் இரவு குடி யரசுத் தலைவருக்கு கடிதம் அனுப் பியுள்ள அவர், அதன் நகலை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
தனது ராஜினாமா குறித்த தக வலை, தலைமை நீதிபதி தஹில் ரமானி, நேற்று முன்தினம் சென்னை நீதித்துறை பயிலரங்கில் தனக்கு இரவு விருந்து அளித்த சக உயர் நீதிமன்ற நீதிபதிகளிடம் வெளிப் படையாகவே தெரிவித்துள்ளார். அப்போது, “நான் மனநிறைவுடன் எனது பதவியை ராஜினாமா செய் யப்போகிறேன். எனக்கு இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அனைவ ருக்கும் நன்றி. இதுவரை நான் யாருக்கும் பயப்படாமல் சுதந்திர மாக செயல்பட்டு பல்வேறு வழக்கு களில் தீர்ப்பளித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். அப்போது சக நீதிபதி கள் அவரது ராஜினாமா முடிவை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும், அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும், தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மட்டு மின்றி வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை வட்டாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண் வழக்கறிஞர்கள் பலர் அவ ருக்காக ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர். மூத்த வழக்கறிஞர் வைகை தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யக் கூடாது எனவும், மூத்த நீதிபதிகளில் ஒருவரான அவரை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது என்பது ஏற்புடையதல்ல என்றும், இதன்மூலம் பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கம் மீண்டும் நிரூபண மாகியுள்ளது எனவும், ஒரு பெண் தலைமை நீதிபதிக்கே நீதி கிடைக் கவில்லை எனவும் கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குடியரசுத் தலைவருக் கும் மனு அனுப்பியுள்ளனர். மேலும் நாளை (செப்.9) உயர் நீதிமன்றத்தில் வி.கே.தஹில் ரமானி யின் இடமாற்றத்தைக் கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக ஆலோ சிக்க சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்கம் (எம்எச்ஏஏ) நாளை அவசர பொதுக்குழுக்கூட் டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளது.கடந்த 2001-ல் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தஹில் ரமானி, பரபரப்பாக பேசப்பட்ட கோத்ரா கலவர வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தவர்.