தமிழகம்

போலியான, பொய் செய்திகளை பரப்புவதைத் தடுக்க கைகோர்த்த சர்வதேச ஊடகங்கள்: தி இந்துவும் இணைந்தது

செய்திப்பிரிவு

சென்னை,

உண்மைக்கு மாறான செய்திகள், போலிச் செய்திகள் ஆகியவற்றை கையாளும், தடுக்கும் வகையிலும் பிபிசி மற்றும் சர்வதேச செய்தித்தளங்கள், ஊடகங்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பில் தி இந்துவும் ஆங்கில நாளிதழும் இணைந்துள்ளது.
தி இந்து இணைந்தமைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சனிக்கிழமை(இன்று) அதிகாலை வெளியானது.

இந்த கூட்டமைப்பில் உள்ள செய்தி ஊடகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றின் முக்கிய நோக்கம், பணி என்பது, வாசகர்களையும், பார்வையாளர்களையும் தவறான தகவல்களில் இருந்து பாதுகாப்பது, குறிப்பாக தேர்தல் நேரத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் இருந்து காப்பதாகும்.

பிபிசி தொலைக்காட்சி இந்த ஆண்டு தொடக்கத்தில் “நம்பக்தன்மை செய்திகள் மாநாடு” என ஒன்று நடத்தியது. இந்த மாநாட்டின் மூலம் சர்வதேச அளவில் இருக்கும் மிகப்ெபரிய செய்தி ஊடகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களை ஒன்றாக இணைத்தது.

இந்தியத் தேர்தலில் எதிர்பாராமல், திடீரென நடக்கும் சம்பவங்கள், உண்மைக்கு மாறான தகவல்களின் ஆபத்துகள் ஆகியவற்றை எடுத்துக்கூறி ஒன்றாக பணியாற்ற வேண்டும் எனும் முக்கியத்துவம் இதில் வலியுறுத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்கள், ஊடகங்கள் ஒன்றாகப் பணியாற்ற ஒப்புக்கொண்டன. இதன்படி, தவறான செய்திகள், உண்மைக்கு மாறான தகவல்கள், வதந்திகள் ஆகியவற்றைக் கண்டறிந்தால் அது மனித உயிருக்கோ அல்லது தேர்தலை சீர்குலைக்கும் விதத்தில் இருந்தால் உடனக்குடன் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு எச்சரிப்பதாகும், இதற்கான ஒரு திட்டமிட்ட செயல்முறை உருவாக்கப்பட்டது.

முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் முறையால் விரைவாக செயல்பட முடியும், ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றி அந்த தவறான தகவல்களை தடுக்க முடியும்

ஆன்-லைன் பிரச்சாரம்

ஆன்-லைன் மூலம் அறிவுறுத்தல் பிரச்சாரத்தில் இணைந்து பணியாற்ற இந்த மாநாட்டில் ஊடகங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒப்புக்கொண்டன. தேர்தல் தொடர்பான தகவல்களை விளக்கி, எப்படி,எங்கு வாக்களிப்பது போன்றவற்றிலும் கூட்டாக இணைந்து செயல்படவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த மாநாட்டில் பிபிசி இயக்குநர் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஒளிபரப்பு கூட்டமைப்பின் தலைவர் டோனி ஹால் பேசுகையில் “ தவறான தகவல், உண்மைக்கு மாறான தகவல், போலிச் செய்திகள் ஆகியவை நமக்கு அச்சுறுத்தல் விளைவிப்பவை. இந்த போலிச் செய்திகள், தவறான தகவல்கள் ஜனநாயகத்துக்கும், மக்களின் உயிருக்கும்கூட அச்சுறுத்தல் விளைவிக்கும் மோசமானது. இந்த பிரச்சினைக்கு எதிராகக் கூட்டாகப் போராடி,செயல்பட்டு சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்க இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில், பிபிசி, ஐரோப்பிய ஒளிபரப்பு கூட்டமைப்பு, ஃபேஸ்புக், ஃபைனான்சியல் டைம்ஸ், ஃபர்ஸ்ட் டிராப்ட், கூகுள், தி இந்து, தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், செய்தி நிறுவனங்களின ஏஎப்பி, சிபிசி/ரேடியோ கனடா, மைக்ரோசாஃப்ட், ராய்டர்ஸ், ராய்டர்ஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டடி ஆப் ஜர்னலிஸம், ட்விட்டர் ஆகியவை பங்கேற்றன.

SCROLL FOR NEXT