தமிழகம்

பேரீச்சை சாகுபடிக்கு தோட்டக்கலைத் துறையில் மானியம் அறிமுகம்: உழவன் செயலி மூலமாகவே பெறலாம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை,

பேரீச்சம் பழங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதைத் தவிர்த்து தமிழகத்திலேயே சாகுபடி செய்ய, தோட்டக்கலைத்துறை, இந்த பழமரங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.

பேரீச்சம் பழம் ஒரு ஊட்டச்சத்து மிகுந்த ஆரோக்கியமான பழமாகும். உலகச் சந்தையில், இந்தியா கிட்டத்தட்ட 35 சதவீதம் பேரீச்சம் பழத்தினை இறக்குமதி செய்கிறது.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த பழங்கள் தேவை அதிகம் இருப்பதால் பேரீச்சையை சாகுபடி செய்ய விவசாயிகளை தோட்டக்கலைத்துறை மானிய உதவிகள் கொடுத்து ஊக்கவிக்கத் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி கூறுகையில், "பொதுவாக பேரீச்சை அரபு நாடுகளில் உள்ள பாலைவனங்களில் மட்டுமே வளரக்கூடியவை என்ற கருத்து நிலவுகிறது.

ஆனால் இதர இடங்களிலும் பேரீச்சை மரங்களை நல்ல முறையில் சாகுபடி செய்யலாம்.

தமிழத்தில் வணிகரீதியாக தர்மபுரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 100 ஏக்கர் பரப்பில் பேரீச்சை சாகுபடி செய்து விவசாயிகள் லாபம் அடைந்து வருகின்றனர்.

தற்போது தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் விவசாயிகள் பேரீச்சை சாகுபடி செய்வதை ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ஹெக்டேருக்கு ரூ.30,000 மானியம்..

இதற்காக தோட்டக்கலைத் துறை தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் வாயிலாக 2019-20 ஆம் ஆண்டில் பேரீச்சை சாகுபடி செய்வதற்கு ஒரு ஹெக்டருக்கு ரூ.30,000 என்ற வீதத்தில் மானியம் வழங்குகிறது.

பேரீச்சை விதைகள் மற்றும் திசு வளர்ப்பு செடிகள் மூலமாக சாகுபடி செய்யலாம். பொதுவாக ஹெக்டருக்கு 175 செடிகள் என்ற விகிதத்தில் நடலாம். நல்ல மகசூல் பெற செயற்கையாக மகரந்த சேர்க்கை செய்வது அவசியமாகிறது.

பயிர் இழப்பை குறைப்பதற்காக, சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சலாம்.

நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் அரசால் வழங்கப்படுகிறது. நன்றாக பராமரிக்கப்பட்ட சூழலில் சராசரியாக மரம் ஒன்றுக்கு 200 கிலோ முதல் 300 கிலோ வரை விளைச்சல் பெறலாம்.

பேரீச்சை சாகுபடி பரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பேரீச்சை சாகுபடி செய்ய மானியம் பெற, உழவன் செயலி மூலமாகவும், மதுரை மாவட்டத்திலுள்ள தோட்டக்கலை துணை இயக்குநர், வட்டார அளவில் தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலரையோ அணுகலாம்," என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT