சென்னை
சந்திரயான்-2 முயற்சி பெருமைக்குரியது என, பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (செப்.7) வெளியிட்ட அறிக்கையில், "நிலவை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் சந்திரயான்-2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட ரோவர் பிரக்யான் எனப்படும் ஆய்வுக்கருவியை விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் தரையிறக்கும் முயற்சியில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னடைவை புறந்தள்ளிவிட முடியாது என்றாலும் இது தற்காலிகமானது தான்.
சந்திரயான் - 2 திட்டத்ததை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கடந்த சில ஆண்டுகளாக ஆற்றிய பணிகளும், விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு கடந்த 48 நாட்களாக இரவு பகல் பாராமல் சந்திரயான்-2 விண்கலத்தின் பாதையைக் கண்காணித்து தேவையான திருத்தங்களை மேற்கொண்ட பணிகளும் மிகவும் சிறப்பானவை; போற்றத்தக்கவை.
நிலவை நெருங்கும் வரையிலான அனைத்துப் பணிகளும் திட்டமிட்டவாறு நடந்த நிலையில், தரையிறங்க 2.1 கி.மீ. தொலைவு மட்டுமே இருந்த போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் இந்தப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. எனினும், சந்திரயான் - 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் என்ற கருவி தொடர்ந்து நிலவைச் சுற்றி வருவதால், நிலவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த ஆய்வுப் பணிகளில் 95% பணிகளை இப்போது செய்ய முடியும் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
நிலவில் இதுவரை பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், நிலவின் தென்பகுதியில் ஆய்வு செய்யும் முயற்சியில் இதுவரை எந்த நாடும் ஈடுபட்டதில்லை. அமெரிக்காவே அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்த முயற்சியைத் தொடங்கவுள்ளது. இத்தகைய சூழலில் நிலவின் தென்பகுதியை சந்திரயான்-2 நெருங்கியதே மிகப்பெரிய சாதனை என்பதில் சந்தேகமில்லை.
விண்வெளி ஆராய்ச்சியில் இத்தகைய பின்னடைவுகள் மிகவும் சாதாரணமானவை ஆகும். நிலவு தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் மேற்கண்ட முயற்சிகளும் தோல்விகளுக்குப் பிறகு தான் சாதனைகளைப் படைத்துள்ளன. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பயணமும் தோல்விப் பாதைகள் வழியாகவே வெற்றிக் கோட்டை எட்டியது. செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவுகலன்களில் பயன்படுத்தும் கிரையோஜெனிக் எந்திர தொழில்நுட்பம் இந்தியாவுக்கு மறுக்கப்பட்ட போது, அந்த தொழில்நுட்பத்தை இந்தியாவே உருவாக்கியது. அதன் உதவியுடன் ஜிஎஸ்எல்வி ஏவுகலன்களை சில தோல்விகளுக்குப் பிறகு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்தியா சாதித்தது.
ஒரு காலத்தில் இந்தியா செயற்கைக்கோள்களை விண்ணுக்குச் செலுத்த பிற நாடுகளை நம்பியிருந்த நிலையில், இப்போது உலகின் பெரும்பாலான நாடுகளின் செயற்கைக்கோள்களை இஸ்ரோ அமைப்பு தான் விண்வெளிக்குச் செலுத்தி வருகிறது. விண்வெளியில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்த இஸ்ரோ, விரைவில் அடுத்தகட்ட சந்திரயான் முயற்சியிலும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. சந்திரயான்-2 முயற்சிக்குப் பங்களித்த அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ககன்யான் உள்ளிட்ட அனைத்து அடுத்த கட்ட முயற்சிகளிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற வாழ்த்துகள்", என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.