ஜி.கே.வாசன்: கோப்புப்படம் 
தமிழகம்

நிலவுப் பயணத்தில் இந்தியா முழு வெற்றி பெறும்: ஜி.கே.வாசன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

சென்னை

நிலவுப் பயணத்தில் இந்தியா முழு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (செப்.7) வெளியிட்ட அறிக்கையில், "இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தொடர்ந்து இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு பல புதிய முயற்சிகள் மூலம் ஆராய்ச்சிகள் செய்து பல முறை வெற்றி கண்டிருக்கிறது. இப்படி விண்வெளி ஆராய்ச்சியில் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதற்கு பாடுபட்ட இந்திய விஞ்ஞானிகளின் பணிகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.

அந்த வகையில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் நிலவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலமாகும்.

இந்த விண்கலத்தை வடிவமைப்பதற்காக விஞ்ஞானிகள் மேற்கொண்ட பணிகளும் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து 2019 ஜூலை 22 அன்று விண்ணில் ஏவியதற்கும், நிலவை நோக்கிப் பயணம் செய்வதற்கும் மேற்கொண்ட முயற்சிகளும் பெரும் பாராட்டுக்குரியவை.

சந்திரயான் 2-ன் ஒரு பகுதியான விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் தரை இறங்கும் கடைசி தருணத்தில் சிக்னல் கிடைக்காமல் போனதால் தரை இறங்க முடியவில்லை. இருப்பினும் சந்திரயான் - 2-ன் நிலவுப் பயணத்திற்காக இறுதிக் கட்டப்பணி வரை மிக கவனமாக, நேர்த்தியாக, அறிவுபூர்வமாக, இரவு பகலாக பணியாற்றிய விஞ்ஞானிகளும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றியவர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

இம்முயற்சியே விஞ்ஞானிகளுக்கு கிடைத்திருக்கும் முதற்கட்ட வெற்றியாகும். கடந்த 48 நாட்களாக சந்திரயான் 2-ன் நிலவுப் பயணத்திற்காக தொடர்ந்து இரவு பகலாக, அர்ப்பணிப்போடு, அறிவுப்பூர்வமாக பணியாற்றி பல்வேறு தகவல்களை பெற்று, அனுபவம் பெற்று நன்கு தேர்ந்திருக்கிறார்கள் நமது விஞ்ஞானிகள்.

இஸ்ரோ இதற்கு முன்னர் பல சாதனைகளைச் செய்து இந்தியாவை உலக அளவில் பெருமை அடையச்செய்திருக்கிறது. குறிப்பாக கடந்த 2008 ஆம் ஆண்டில் இஸ்ரோ சந்திரயான் - 1 விண்கலத்தை நிலவை ஆய்வு செய்வதற்காக ஏவி வெற்றி பெற்றது விஞ்ஞானிகளின் வெற்றியில் ஒரு புதிய மைல் கல். மேலும் சந்திரயான் - 2-ன் நிலவுப் பயணத்திற்கு விஞ்ஞானிகள் மேற்கொண்ட கடினப் பணிகள், தொடர் முயற்சிகள் நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கக்கூடிய வெற்றி முயற்சியே. இந்த முயற்சிகள் வரும் காலங்களில் தொடரும், நிலவுப் பயணத்தில் இந்தியா முழு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

சந்திரயான் - 2-ன் நிலவுப்பயணத்திற்கு விஞ்ஞானிகள் மேற்கொண்ட கடினப் பணிகளும், முயற்சிகளும் மாணவர்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் அறிவியல் ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. மேலும் இளம் விஞ்ஞானிகளுக்கு உந்துதலையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே இந்தியாவை உலகம் வியக்கும் காலம் வெகு விரைவில் வருவதற்காக நமது நாட்டு விஞ்ஞானிகள் சந்திரயான் - 2-ன் முழு வெற்றிக்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு சரித்திர சாதனை பெற வேண்டும் என்று 130 கோடி இந்திய மக்களின் சார்பாக தமாகா இஸ்ரோ விஞ்ஞானிகளை நன்றியோடு நினைத்துப் பார்த்து பாராட்டுகிறது, வாழ்த்துகிறது.

இஸ்ரோ விஞ்ஞானிகளின் விண்வெளி ஆராய்ச்சிப் பயணம் வெற்றிக்கரமாக தொடர, வளர, சிறக்க தமாகா சார்பில் வாழ்த்துகிறேன்", என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT