ராமதாஸ்: கோப்புப்படம் 
தமிழகம்

இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைவில் நிலவை ஆளும் முயற்சியில் வெற்றியைச் சுவைப்பர்: ராமதாஸ்

செய்திப்பிரிவு

சென்னை

இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைவில் நிலவை ஆளும் முயற்சியில் வெற்றியைச் சுவைப்பர் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் காண, கர்நாடக மாநிலம், பெங்களூரு பீன்யாவிலுள்ள, இஸ்ரோ கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைக் காண்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று (செப். 6) இரவு பெங்களூரு வந்தார். அவருடன், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ - மாணவியரும் பெங்களூரு வந்தனர்.

சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், இன்று அதிகாலை, 2:15 மணி அளவில், தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து, 'சிக்னல்' துண்டிக்கப்பட்டது. இதை, இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார்.

இதையடுத்து, மனம் துவண்டிருந்த விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதையடுத்து, மனம் உடைந்து அழுத இஸ்ரோ தலைவர் சிவனை பிரதமர் தேற்றினார்.

இந்நிலையில், சந்திராயன் - 2 விண்கலத்திற்காக உழைத்த விஞ்ஞானிகளை அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர். அதன்படி, பாமக நிறுவனர் ராமதாஸும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சந்திரயான் விண்கலத்தின் ஆராய்ச்சிக் கருவியை தரையிறக்குவதில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதே. பின்னடைவைச் சந்திக்காத விண்வெளி ஆராய்ச்சி உலகில் ஏதுமில்லை. சந்திரயான்-2 முயற்சி மிகவும் அற்புதமானது. இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களின் முயற்சி போற்றத்தக்கது.

2.1 கி.மீ. இடைவெளியில் நிலவு சாதனையை இழந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைவில் நிலவை ஆளும் முயற்சியில் வெற்றியைச் சுவைப்பர். சாதாரண மனிதனுக்கும் நிலவு ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை சந்திரயான் -2 ஏற்படுத்தியுள்ளது. நிலவை நெருங்கும் முயற்சியில் விஞ்ஞானிகளுக்கு இந்த நாடு துணை நிற்கும்," என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT