ஒரு நாள் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர். 
தமிழகம்

புற்றுநோய் சிறுவனின் உயிரைக் காப்பாற்ற 4-30 மணி நேர புயல் பயணம்: ஆம்புலன்ஸ்  ஓட்டுநர் ஒரு நாள்  முதல்வரானார்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காப்பாற்ற 4-30 நேரத்தில் ராமநாதபுரத்திலிருந்து புதுவை வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ராமநாதபுரம் தனியார் கல்லூரியின் ஒரு நாள் கவுரவ முதல்வராக கவுரவிக்கப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் அழகன் குளத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அச்சிறுவனை 8 மணி நேரத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் மட்டுமே உயிரைக் காப்பாற்ற முடியும் என ராமநாதபுரம் அரசு மருத்துமனை மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இதையடுத்து கடந்த மாதம் 31-ம் தேதி மாலை சிறுவனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தமுமுக அமைப்பினர் ஆம்புலன்ஸை தயார் செய்தனர். இதற்காக ராமநாதபுரம், புதுச்சேரி இடையே உள்ள அனைத்து ஊர்களிலும் உள்ள தமுமுக அமைப்பினருக்கு வாட்ஸ்அப் குழுக்களில் தகவல் தெரிவித்து, போக்குவரத்தை சரி செய்ய காவல்துறை உதவியையும் நாடினர்.

அதன் மூலம் ராமநாதபுரத்தில் இருந்து புதுச்சேரிக்கு 4.30 மணி நேரத்தில் ஆம்புலன்ஸில் கொண்டு சென்று சிறுவனின் உயிரைக் காப்பாற்றினர். அதனையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முகம்மது ஜாஸூக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்தன.

இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கவுரவிக்கும் விதமாக ராமநாதபுரத்தில் உள்ள தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி நேற்று, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முகம்மது ஜாஸை, தங்களது கல்லூரியின் ஒரு நாள் கவுரவ முதல்வராக நியமித்து கவுரவித்தது. கல்லூரி நிர்வாகம் ஒரு நாளுக்கான ஊதியத்தையும் அவருக்கு வழங்கியது.

மேலும் கல்லூரியின் முதல்வர் முகம்மது சலாவுதீன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டினர்.

SCROLL FOR NEXT