தமிழகம்

காவித் துண்டு போட்டு ரவீந்திரநாத் பேசினால் அது தவறா?- எச்.ராஜா

செய்திப்பிரிவு

கஞ்சி குடிக்கும்போது குல்லா போட்டுக் கொள்ளலாம். ஆனால் காவித் துண்டு போட்டு, ரவீந்திரநாத் பேசினால் தவறா என்று எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சின்னமனூர் பகுதியில் இந்து முன்னணி சார்பாக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் கலந்துகொண்டார்.

காவித்துண்டு அணிந்து மேடையில் தோன்றிய ரவீந்திரநாத் குமார், "கடந்த ஆண்டு, இதே சின்னமனூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நான்தான் தொடங்கிவைத்தேன். தற்போது, நாடாளுமன்ற உறுப்பினராக இந்த ஊர்வலத்தைத் தொடங்கி வைத்திருக்கிறேன். கடந்த ஆண்டு பேசும்போது, மோடியே அடுத்த பிரதமராக வருவார் எனக் கூறினேன். அதேபோல அவரே பிரதமராக வந்துவிட்டார்.

இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதற்கான முயற்சியில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். நாம் அனைவரும் இணைந்து, வலிமையான புதிய பாரதத்தை உருவாக்க ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும். நாம் முதலில் இந்து. அதற்கு அப்புறம்தான் மற்றது என்ற உணர்வு நமக்குள் ஏற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்" என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினரும் துணை முதல்வர் ஓபிஎஸ்-ஸின் மகனுமான ரவீந்திரநாத் குமாரின் இந்தப் பேச்சு, சமூக வலைதளங்களில் விவாதத்தையும் கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''முஸ்லிம்களுக்கு அரணாக இருப்போம், சிறுபான்மையினருக்கு அரணாக இருப்போம் என்றும் மாற்று மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் திமுக, தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாததை ஊடகங்கள் விவாதிக்கலாமே.

அதை விடுத்து ஓ.பி.ரவீந்திரநாத், நாம் இந்துக்கள் என்றதை விவாதிப்பதும் இந்து விரோதமே. கஞ்சி குடிக்கும் போது குல்லா போட்டுக் கொள்ளலாம். ஆனால் காவித் துண்டு போட்டு ரவீந்திரநாத் பேசினால் அது தவறா? வெட்கம்'' என்று பதிவிட்டுள்ளார் எச்.ராஜா.

SCROLL FOR NEXT