கோவை
தமிழக விஞ்ஞானிகள் எல்லோரும் பொருளாதார நிபுணர்களாக மாறிவிட்டார்கள் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட உதவும் 5 முதன்மைக் காரணிகளில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் ரியல் எஸ்டேட், வேளாண் துறை, உற்பத்தி மற்றும் தொழில் துறை ஆகியவை கடுமையான பாதிப்பை அடைந்துள்ளளன. இதைத் தொடர்ந்து நாட்டில் பொருளாதார சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
கோயம்புத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''காங்கிரஸ் கட்சி தனது ஊழல்களை மறைப்பதற்காகத்தான் பொருளாதார வீழ்ச்சி என்று பொய் சொல்கிறது. விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள மின்சார வாகனங்களை வாங்குவதற்காகவே, மக்கள் புதிய மோட்டார் வாகனங்களை வாங்குவதில்லை. தமிழகத்தில் சிவகங்கை, தூத்துக்குடி, நீலகிரி, மத்திய சென்னை ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழக பாஜக தலைவர் குறித்து, அகில இந்திய பாஜக தலைமை விரைவில் முடிவு செய்யும். தமிழகத்திலும் இந்திய அளவிலும் ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ தொடர்பான விஞ்ஞானிகள் நிறையப் பேர் இருந்தனர். இப்போது விஞ்ஞானிகள் எல்லோரும் பொருளாதார நிபுணர்களாக மாறிவிட்டார்கள். ராமர் பாலம் குறித்து கருணாநிதி ஒருமுறை கூறினார். ராமர், எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார் என்று கேட்டார்.
இப்போது நான் கேட்கிறேன். ஸ்டாலின் எந்தக் கல்லூரியில் பொருளாதாரம் படித்தார்? இந்தியாவில் பொருளாதார நெருக்கடி என்று அவர் சொல்கிறார்'' என்று எச்.ராஜா தெரிவித்தார்.