தமிழகம்

உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 4 எம்பிக்கள்; செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு: விரைவில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மற்றக்கட்சியைச் சேர்ந்த 4 எம்.பி க்களின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிய மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில், திமுகவின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் விசிக கட்சியின் ரவிக்குமார் விழுப்புரத்திலும், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ் நாமக்கல் தொகுதியிலும் , மதிமுகவின் கணேசமூர்த்தி ஈரோடு தொகுதியிலும், ஐ.ஜே.கே-வின் பாரிவேந்தர் பெரம்பலூரிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு பேரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது எனவும், இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா? என்பது குறித்து நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு விசாரித்தது. மனுவை முழுமையாக ஆய்வு செய்த நீதிபதிகள், மனுவை விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

SCROLL FOR NEXT