மதுரை,
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீயணைப்பு துறையிடம் ஒவ்வோர் ஆண்டும் பெற வேண்டிய தடையில்லா சான்று பெறவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று பிளாஸ்டிக் சர்ஜரி வார்டில் பழைய பொருட்கள் தீபிடித்து எரிந்து புகைமூட்டம் ஏற்பட்டது. நோயாளிகள் வெளியேற்றப்பட்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
மருத்துவமனையில் தொடர்ந்து அடிக்கடி சிறுசிறு மின்கசிவு, தீ விபத்துகள் ஏற்படுகின்றன. ஆனால், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப்பிரிவு கட்டிட வளாகங்களில் நோயாளிகள் பயன்படுத்திய பழைய கட்டில், மெத்தைகள், பெட்ஷீட்கள், மருத்துவ உபகரணங்கள் பாதுகாப்பு இல்லாமல் போடப்பட்டுள்ளன.
நேற்று தீ விபத்து நடந்த பிளாஸ்டிக் சர்ஜரி வார்டில் கூட பூட்டி வைக்கப்பட்ட ஒரு அறையில் நோயாளிகள் பயன்படுத்திய எளிதில் தீப்பற்றக்கூடிய மெத்தைகள், கட்டில்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வார்டுகளிலும் தீயணைப்பு கருவிகள் இல்லை. தீயணைப்புத் துறை அறிவுறுத்திய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. தீவிபத்துகள் ஏற்படும் 120 அடி வரையுள்ள உயரமான கட்டிடங்களில் சிக்கி கொண்டவர்களைக் காப்பாற்ற பயன்படுத்தப்படும் ‘பிராண்டோ ஸ்கை லிப்ட்’ (Bronto Skylift) வாகனம், நேற்று விபத்து நடந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை. அந்தளவுக்கு இடநெருக்கடி குறுகிய, குட்டையான கட்டிடங்கள் உள்ளன.
அதனால், மருத்துவமனை நிர்வாகம் தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று பெற்றுள்ளதாக என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டில் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த எம்.பழனிசாமி என்பவர் மதுரை மாவட்டத்தில் தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று பெற்ற மருத்துவமனைகள் பட்டியலை கேட்டுள்ளார். அதில், தீயணைப்பு துறை பட்டியலில் அரசு மருத்துவமனைகள் பட்டியலில், திருமங்கலம், டி.வாடிப்பட்டி, சோழவந்தான், பேரையூர், உசிலம்பட்டி ஆகிய அரசு மருத்துவமனைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை இடம்பெறவில்லை.
தீயணைப்புத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மதுரை அரசு மருத்துவமனையை பொறுத்தவரையில் புதிய கட்டிடங்களில் தீயணைப்புக் கருவிகள், தீ தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக உள்ளன. பழைய கட்டிடங்களில் சரியாக பின்பற்றப்படவில்லை. விரைவில் ஒரு குழுவாக சென்று மருத்துவமனையில் முழுமையாக ஆய்வு செய்து அவர்களை அனைத்து தீ விபத்து பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவும் அறிக்கை வழங்க உள்ளோம், ’’ என்றார். என்ஓசி பெற்றுள்ளதா? இல்லையா? என்பதை தீயணைப்பு துறை வெளிப்படையாக தெரிவிக்க முன்வரவில்லை.
தீயணைப்பு துறை என்ஓசி எப்படி வழங்கப்படுகிறது?
49 அடிக்கு மேல் உள்ள மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், அலுவலக கட்டிடங்களுக்கு தீயணைப்பு துறை இயக்குனரும், 49 அடிக்கு கீழ் உள்ள கட்டிடங்களுக்கு துணை இயக்குனர், மாவட்ட தீயணைப்பு அலுவலரும் பார்வையிட்டு தடையில்லா சான்று வழங்குவார்கள்.
தீயணைப்பு நிலைய அலுவலர்களுக்கு பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்க அதிகாரம் உள்ளது.
இந்த கட்டிடங்கள் கட்டும்போதே தீயணைப்பு துறையில் தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே அந்த வளாகம் செயல்பட முடியும். ஒவ்வோர் ஆண்டும், அந்த தடையில்லா சான்றை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை.
இந்த ஆய்வில், முக்கியமாக அரசு வரையறுக்கப்பட அனுமதி, கட்டிட ஸ்திரத்தன்மை, தீ விபத்து நடந்தால் உள்ளே இருப்பவர்கள் வெளியேற கதவுகள் உள்ளே இருந்து வெளியே தள்ளிவிட்டு திறக்கிற மாதிரி இருக்கிறதா என்று பார்க்கப்படும். பள்ளிகள், மருத்துவமனைகளில் ஒவ்வோர் அறைக்கும் இரண்டு கதவுகள் இருக்கிறதா? என்பது ஆய்வு செய்யப்படும்.