திருநெல்வேலி,
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் நெல்லையில் தெரிவித்தார்.
சுதந்திர போராட்டத் தியாகி கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 148-வது பிறந்த நாள் தினம் இன்று (செப்.5) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள வஉசி மணி மண்டபத்தில் அவரின் திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விடுதலை சிறுத்தை கட்சித் தலைவரும் எம்.பி.யுமான தொல் திருமாவளவன் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "நாங்குநேரி விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு அளிக்கவுள்ளோம். இரண்டு தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற செய்யவைப்பது விசிகவின் தலையாய கடமையாகும்.
நடந்து முடிந்த தேர்தல்களில் திமுகவை மக்கள் ஆதரித்துள்ளனர்.அதேபோல வரும் தேர்தலும் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.
மேலும், ”தொழில்துறையில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது என்றும் தொழில்துறையில் இதுவரை போடபட்ட ஒப்பந்தங்களால் எந்த பலனுமில்லை. முதல்வரின் வெளிநாட்டு பயணம் மூலம் கிடைக்கும் முதலீட்டால் தமிழகத்திற்கு பயன் கிடைத்தால் அதனை வரவேற்பது எங்களின் கடமை” என்றும் தெரிவித்தார்.