தமிழகம்

அன்பாசிரியர் லதா: 'ஆட்டிசம், ஹைப்பர் ஆக்டிவ், டவுன் சிண்ட்ரோம்'- கடவுளின் குழந்தைகளைச் செதுக்கும் தாய்!

க.சே.ரமணி பிரபா தேவி

ஆசிரியத் துறைதான் மற்ற அனைத்துத் துறைகளையும் உருவாக்குகிறது

அதுவோர் அழகிய வகுப்பறை. வண்ண மணிகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. வெவ்வேறு தானியங்களின் குவியல் கொட்டப்பட்டிருக்கிறது. வெண்ணிற அட்டைகள், வண்ணங்கள் நிரப்பப்படக் காத்திருக்கின்றன. அங்கிருக்கும் குழந்தைகள் அத்தனை பேரின் முகத்திலும் புன்னகையும் அமைதியும் தவழ்கிறது. ஓசூரின் அமைதியான சாலையில் அமைந்திருக்கிறது அன்னை அரவிந்தர் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி.

குழந்தைகளுக்கான ப்ளே ஸ்கூல், டே கேர், அனைத்து வகையான மனக்குறைபாடு கொண்ட மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளி என சுற்றிச் சுழல்கிறார் அன்பாசிரியர் லதா.

எம்.காம். பட்டதாரியான அவர், சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியராக, பள்ளியின் நிறுவனராக மாறிய தருணம் எதனால், எப்படி நிகழ்ந்தது? தன்னுடைய வாழ்க்கைப் பயணத்துக்குள் நம்மையும் அழைத்துச் செல்கிறார். ''2000-ம் ஆண்டின் தொடக்கம். வேலைக்குச் செல்வதால் ஒன்றரை வயது மகனை டே கேரில் விட்டுவிட்டு அலுவலகம் செல்வேன். ஆனால் சுகாதாரக் குறைவு காரணமாக மகனின் உடல்நலத்தில் பிரச்சினை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

ஒருகட்டத்தில் நாமே சொந்தமாக ஒரு ப்ளே ஸ்கூல் ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது. 2003-ல் தொடங்கினோம். முறையான கவனிப்பு, சுத்தம், அக்கறை காரணமாக, அதிக அளவில் மாணவர்கள் வரத் தொடங்கினர். 6 மாதக் குழந்தையில் இருந்து 6 வயது சிறுவர்கள் வரை எங்களிடம் வந்தனர். நன்றாக சென்றுகொண்டிருந்த காலகட்டத்தில் விமல்ராஜ் என்னும் 3 வயது சிறுவன், ப்ளே ஸ்கூலுக்கு வந்தான்.

நாட்கள் செல்லச்செல்ல அவனிடம் சில மாற்றங்களை உணர முடிந்தது. பேச மாட்டான், மற்ற மாணவர்களோடு பழக மாட்டான், ஓரமாய்ச் சென்று அழுவது, மற்றவர்களைச் சார்ந்தே இருப்பது என இருப்பான். பெற்றோருக்கும் அதுபற்றிய சரியான தெளிவு இல்லை, எனக்கும் என்னவென்று புரியவில்லை. 2003-ம் ஆண்டு அது. பரிசோதனையின் முடிவில் விமலுக்கு ஆட்டிசமும் ஏடிஎச்டியும் (ஹைப்பர் ஆக்டிவ்) இருந்தது தெரியவந்தது.

உறவினர்கள் சிலர், 'உனக்கு இது ஒத்துவராது. தொந்தரவாக இருக்கும். வழக்கமான குழந்தைகளே போதும்' என்றனர். என கணவரும் மகனும் அளித்த ஊக்கத்தில் உளவியல் படித்தேன். மனநலக் குறைபாடு பிரிவில் ஆசிரியர் பயிற்சியை முடித்தேன். எம்.ஆர். (MR - Mentally Retarded) குழந்தைகளுக்காகத் தனிப்பள்ளியைத் தொடங்கினோம்.

5 வருடங்கள் தொடர் பயிற்சிக்குப் பிறகு, விமல் ராஜ் தனது 8-வது வயதில் உட்கார்ந்து, படிக்க ஆரம்பித்தான், பேசத் தொடங்கினான். ரைம்ஸ் சொன்னான். 10-ம் வகுப்பில் 400-க்கு 266 மதிப்பெண்கள் வாங்கிய விமல், தற்போது 12-ம் வகுப்புக்காகத் தயாராகி வருகிறான்'' என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் அன்பாசிரியர் லதா.

மனநலக் குறைபாடு என்றாலே ஆட்டிசம் என்று பொதுவான கருத்து இருக்கிறது. பொதுவாக என்னென்ன வகை குறைபாடுகள் இருக்கின்றன, எதனால் இவை ஏற்படுகின்றன என்ற கேள்விக்கு விரிவாகவே பதில் சொல்கிறார்.

''பல விதமான எம்ஆர் குழந்தைகள் உள்ளனர். ஆட்டிசம், ஏடிஎச்டி (ஹைப்பர் ஆக்டிவ்), டவுன் சிண்ட்ரோம், மூளை முடக்குவாதம் (cerebral palsy), மனநலக் குறைபாட்டுடன் காது கேளாமை, கண் பார்வை இல்லாமை, வாய் பேச முடியாமை, வளர்ச்சியில் தாமதம் (Developmental delay) உள்ளிட்ட பல வகைகள் இதில் உள்ளன.

இதற்குப் பொதுவான காரணம், கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் மன அழுத்தம், பிபி, சர்க்கரை, தைராய்டு போன்றவைதான். இதனால் பிறக்கும் குழந்தைகளின் மன வளர்ச்சியில் குறைபாடு ஏற்பட்டிருக்கும். அவர்களுக்கெனத் தனியாக சிறப்புப் பயிற்சி முறைகள் இங்கு அளிக்கப்படுகின்றன.

என்ன மாதிரியான பயிற்சிகள்?

முதலில் வருபவர்களின் வயதை அறிந்துகொள்வோம். அவர்களின் உடல் வயதும் மன வயதும் வேறு வேறாக இருக்கும். அவர்களின் மன வயதுக்கு ஏற்ற வகையில், அவர்களை ஆரம்ப நிலை (educable), இடை நிலை (trainable), உயர்நிலை (custodial) என மூன்றாகப் பிரிப்போம்.

அவர்களின் நிலைக்கு ஏற்றவாறு கை, கண் ஒத்திசைவுப் பயிற்சிகள், கால் பயிற்சிகள் அளிக்கிறோம். கை பயிற்சியில் மணிகளைக் கோப்பது, கட்டிடங்களை உருவ வரிசையில் அடுக்குவது, வண்ணத்தைப் பிரிப்பது, கலரிங் செய்வது என நீளும். கால் பயிற்சியில் ஊர்ந்து செல்வது, குதிப்பது, தரையில் நீச்சலடிப்பது, தடை தாண்டுவது என சற்றே கடினமான பயிற்சிகள் இருக்கும்.

கால் பயிற்சிகளை பெரும்பாலும் ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளுக்கே சொல்லிக் கொடுக்கிறோம். இதன்மூலம் அவர்களின் சக்தி செலவாகி, அமைதியடைவர். ஆரம்பகட்ட எளிய பயிற்சிகளை நன்றாகச் செய்பவர்களுக்குப் படிப்படியாக அடுத்தடுத்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பேச்சுப் பயிற்சி, உளவியல் வகுப்பு

எம்ஆர் குழந்தைகள் தெளிவாகக் கோர்வையாகப் பேச வேண்டும் என்பதற்காக, தினந்தோறும் பேச்சுப் பயிற்சி அளிக்கிறோம். அதேபோல ஆக்குபேஷனல் தெரபியும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதுதவிர யோகாவும் பிசியோதெரபியும் உண்டு. உளவியல் வகுப்புகளும் எடுக்கப்படுகின்றன.

இந்தக் குழந்தைகள் ஓரளவு தங்களின் தினசரிப் பழக்க வழக்கங்களைக் கற்று, சமூக வழக்கங்களைப் பின்பற்றிய பின், கல்வி கற்றுக் கொடுக்கிறோம். இவர்களுக்காகவே எளிமைப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

பொதுவாக எம்ஆர் குழந்தைகளுக்குக் கலை ஆர்வம் அதிகம் இருக்கும். இதனால் இசை, நடனம், ஓவியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். இதற்காகத் தனித் தனி ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். மற்ற பள்ளிகளில் நடத்தப்படும் கலை, அறிவியல் போட்டிகளில் கலந்துகொண்டு எங்கள் மாணவர்கள் பரிசு பெற்றிருக்கின்றனர். அதேபோல தேங்காய் ஓடுகளில் இருந்து கலைப் பொருட்களை உருவாக்கவும் கற்றுத் தருகிறோம். விதைப் பந்துகளைச் செய்யவும் கற்றுத் தருகிறோம்.

வெவ்வேறு வடிவத்தில் நாற்காலிகள்

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதக் குறைபாடு இருக்கும் என்பதால், அவர்கள் உட்காரும் நாற்காலிகளை நாங்களே வடிவமைக்கிறோம். அவர்களை அதில் அமர வைத்து, போதிய இடைவெளி கொடுக்கப்பட்டு, பூட்டி விடுகிறோம். நின்றுகொண்டே இருக்கும் நாற்காலி, தலை நிற்காதவர்களுக்கு சாய்வு நாற்காலி என தேவைக்கேற்ற வகையில் குழந்தைகளுக்கு சேர், டெஸ்குகளை வழங்குகிறோம்.

எங்கள் பள்ளிக்கு வந்து ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பி, வெளியே படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு, பெரும்பாலான இடங்களில் அனுமதி கிடைப்பதில்லை. இதனால் நாங்களே தனித் தேர்வு எழுத வைத்து, தேர்ச்சி பெற வைக்கிறோம்.

சாதித்த செல்வங்கள்

சிறப்புப் பள்ளியைத் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை 300 மாணவர்கள் 90 சதவீதம் சரியாகி, வெளியே சென்றிருக்கின்றனர். எங்களிடம் படித்த ஊட்டியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்னும் மாணவர், இப்போது பாலிடெக்னிக் முடித்துவிட்டு ஊட்டியிலேயே பணியாற்றுகிறார். +2 முடித்த விவேக், இசை மீதான ஆர்வத்தால், ஜெயா தொலைக்காட்சியில் வெளியாகும் 'சிறகடிக்க ஆசை' என்னும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார். கலையரசன் என்னும் 9-ம் வகுப்பு பார்வையற்ற மாணவர், இளையராஜா பாடல்களைப் பாடி அவரைச் சந்திக்க உள்ளார்.

கிராமங்களில் உள்ள எம்ஆர் குழந்தைகள் குறித்த புரிதல் அவர்களின் பெற்றோருக்கே இருப்பதில்லை. இதனால் வார இறுதி நாட்களில் மகனுடன் சேர்ந்து கிருஷ்ணகிரியில் உள்ள கிராமங்கள் அனைத்துக்கும் சென்று இலவச விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கிறோம். அப்போது கடவுளின் குழந்தைகளுக்கு எந்த வசதியையும் செய்துகொடுக்காமல், வீட்டிலேயே முடக்கிவிடாதீர்கள் என்று சொல்வோம்'' என்கிறார் அன்பாசிரியர் லதா.

சிறப்புக் குழந்தைகளுக்கு, குறைந்தபட்சக் கட்டணமும் முடியாதவர்களிடம் அதையும் வாங்குவதில்லை என்று சொல்லும் ஆசிரியர் லதா, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட சில தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமலேயே இருப்பதாகக் கூறுகிறார்.

பெற்றோரின் கடமை

மனக் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு சிறப்புப் பள்ளிகள் மட்டும் போதாது. பெற்றோரின் கவனிப்பும் மிக முக்கியமானது. இதுதொடர்பாக அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்றதற்கு, ''குழந்தையிடம் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தவுடன் பெற்றோர், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். அவர்களின் ஆலோசனையின்பேரில் தகுதி வாய்ந்த சிறப்புப் பள்ளியில் சேர்த்துவிடுங்கள். உங்களின் மனக் கவலையிலும் தயக்கத்திலும் குழந்தைகளின் வருடங்களை வீணாக்கி விடாதீர்கள்.

அவர்களின் மீது இரக்கத்தைச் சுரந்து தனிமைப்படுத்தி விடாதீர்கள்; ஊக்குவித்து இயல்பாக இருக்க விடுங்கள். அவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து அதில் சிறந்து விளங்கப் பயிற்றுவியுங்கள். அவர்கள் கடவுளின் குழந்தைகள். போராடி வெற்றி பெறுவார்கள்'' என்று உற்சாக டானிக் விதைக்கிறார் அன்பாசிரியர் லதா.

தொடர்புக்கு: அன்பாசிரியர் லதா- 9894622637

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

SCROLL FOR NEXT