தமிழகம்

கட்டிடங்களைப் பராமரிப்பின்றி கொசுக்கள் உற்பத்தி ஆகும் நிலையில் வைத்திருந்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் : சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை,

மழைக்காலம் தொடங்குவதால் கட்டிடங்களைப் பராமரிப்பின்றி வைத்திருந்து கொசுக்கள் உற்பத்தி ஆகும் நிலையில் உள்ளதைக் கண்டறிந்தால் அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

மழைக்காலம் தொடங்கும் நேரம் இது. கண்டபடி போட்டு வைத்திருக்கும் பொருட்களில் மழை நீர் தேங்கி, அதில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவது வாடிக்கையாக இருந்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டு.

டெங்கு கொசுக்கள் சுத்தமான மழை நீரில் முட்டையிட்டு வளர்வதால் வீடுகள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் புழங்கும் பகுதிகளில் தேவையற்றப் பொருட்களை மழை நீர் தேங்கும் அளவுக்கு போட்டு வைக்கக்கூடாது என சென்னை மாநகராட்சி தொடர்ந்து எச்சரித்தும், கண்காணிக்கக் குழுக்களையும் அமைத்துள்ளது.

இந்தக் குழுக்கள் ஆய்வு செய்யும்போது பராமரிப்பின்றி நோய் பரப்பும் விதமாக கட்டிடங்கள், குடியிருப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என ஏற்கெனவே சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழுக்கள் கடந்த சில நாட்களாக ஆய்வு நடத்தி வருகிறது.

சென்னை ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. அதில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்துகொண்டு மாணவிகளிடையே உரையாற்றினார்.

அப்போது டெங்கு கொசுக்கள் பற்றியும், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் முறைகள் குறித்தும் அவர் விளக்கிப் பேசினார், சென்னையில் பராமரிப்பின்றி டெங்கு, மலேரியா கொசுக்கள் உற்பத்தியாகும் விதத்தில் இருந்த கட்டிடங்களுக்கு இதுவரை 15 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுகள் பரவாமல் இருக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், 500 வீடுகளுக்கு ஒரு அதிகாரி என நியமித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி வருவதாகவும், கட்டிடங்களைப் பராமரிப்பின்றி வைத்திருந்து கொசுக்கள் உற்பத்தி ஆகும் நிலையில் உள்ளது கண்டறியப்பட்டால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார்.

SCROLL FOR NEXT