சென்னை
அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணம் சென்றதில் தவறில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பாடத்திட்டம், தேர்வு முறை உட்பட கற்றல் பணிகளில் பல் வேறு மாற்றங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அதன்படி மலேசியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சுற்றுப்பயணம் சென்று அங்குள்ள சிறந்த கல்வித் திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினார்.
இதற்கிடையே சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த பின்லாந்து கல்வித்துறை அதிகாரிகள் தங்கள் நாட்டுக்கு வரும்படி செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுத்தனர். அதையேற்று அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலர் பிரதீப் யாதவ் தலைமையிலான கல்விக்குழு பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு 28-ம் தேதி புறப்பட்டுச் சென்றது.
அங்குள்ள பள்ளிகளில் பின்பற்றப்படும் கல்வி முறை, கற்றல் உபகரணங்கள், மாணவர்கள் கற்றல் திறன் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்ததுடன், பள்ளி முதல்வர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில் மீண்டும் இந்தியா திரும்பிய அவர், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''பின்லாந்தில் உயர்நிலைப் பள்ளிதான் உள்ளது. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், 9-ம் வகுப்பு படிக்கும்போதே தங்களுக்கு ஏற்ற தொழிற்கல்வியைக் கற்கலாம். இதற்கு பின்லாந்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்மூலம் 18 வயது நிரம்பியவுடன் மாணவர்கள், தங்களின் பெற்றோரைச் சார்ந்திருக்காமல் வாழ்க்கையை நடத்த முடியும். மாணவர்களின் எதிர்காலத்தைச் சிறந்த முறையில் மேற்கொள்ளவே, பின்லாந்து பயணம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழக மாணவர்கள் தன்னம்பிக்கையோடு தங்களின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கவும் சிறந்த தொழிற்கல்வியைக் கற்கவும் அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும். பின்லாந்தில் உள்ளது போல் இங்கும் தொழிற்கல்வி செயல்படுத்தப்படும்.
முதல்வரின் ஆலோசனை மற்றும் ஒப்புதலின் பேரில், எந்தெந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றால் பயனுள்ளதாக இருக்கும் என்ற முறையில்தான் பயணம் மேற்கொண்டுள்ளோம். இதில் எந்தத் தவறுமில்லை'' என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.