தமிழகம்

ப.சிதம்பரம் கைதுக்குப் பின் மத்திய அரசை எதிர்க்க ஸ்டாலின் பயப்படுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார் 

செய்திப்பிரிவு

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலானாலும், விலையில்லா அரிசி சாதாரண ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். ஆனால் அண்டை மாநில மக்களுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையில் வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

வ.உ.சிதம்பரம் பிறந்த நாளில் கலந்துகொண்டபின் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, ''கப்பலோட்டிய தமிழன் யார் என்று சின்னக் குழந்தைகளைக் கேட்டால்கூட வ.உ.சி என்று சொல்லும். 18-ம் நூற்றாண்டில் பிறந்து ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போராடியவர் வ.உ.சி.

அதனால் அவரது பாரிஸ்டர் பட்டத்தைக்கூட ஆங்கிலேய அரசு பறித்தது. அப்படிப்பட்டவரின் பிறந்த நாள் இன்று. அவர் தமிழருக்குப் பெருமை சேர்த்தவர். தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பலோட்டியவர். அதனால் கப்பலோட்டிய தமிழன் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

எனவேதான் மறைந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வ.உ.சி.க்கு மணிமண்டபம் அமைத்தார்'' என்றார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை ஸ்டாலின் கடுமையாக எதிர்த்துள்ளது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனித்தால் தெரியும். ப.சிதம்பரம் கைதுக்குப் பின் ஸ்டாலினின் குரல் மென்மையாக ஆகிவிட்டது. காரணம் சிதம்பரத்துக்குப் பிறகு அவர் என்கிற நிலை உள்ளது. எச்.ராஜாகூட அதைத் தெரிவித்துள்ளார். அவர் அதற்குப் பின் மத்திய அரசை கடுமையாக எதிர்த்துள்ளாரா? அதை நீங்கள் உங்கள் தொலைக்காட்சிகளில் போட்டுக்காட்டுங்கள். இந்த விவகாரத்தில் விமர்சனம் வரக்கூடாது என்பதற்காக ஸ்டாலின் லேசாக டச் பண்ணுகிறார்.

எங்களுக்கு மாநில நலன், மக்கள் நலன், நுகர்வோர் நலனில் இவர்களைவிட அக்கறை அதிகம் உண்டு. பொதுவிநியோகத் திட்டத்தில் ஆண்டாண்டு காலமாக ஒரு குக்கிராமத்தில் கூட ரேஷன் கடை அமைத்து அனைவருக்கும் கொண்டு சேர்க்கப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இது கிடையாது.

பொதுவிநியோகத் திட்டம் எந்த விதத்திலும் சிதையக்கூடாது என்பதுதான் இந்த அரசின் திட்டம். ஏழை எளிய மக்களுக்குத் தொடர்ந்து விலையில்லா அரிசி கிடைக்கும். ஆனால், வெளிமாநிலத்தவருக்கு அப்படி கிடைக்காது. மத்திய அரசின் விலை விலை நிர்ணயப் பிரகாரம் கிடைக்கும்’’ என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT