கனிமொழி: கோப்புப்படம் 
தமிழகம்

கனிமொழிக்கு நோட்டீஸ்: தூத்துக்குடி வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளிக்க கனிமொழிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை விட 3.47 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அதில், கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளதாகவும், முறையற்ற வகையில் இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது இந்த ஆட்சேபங்கள் தெரிவித்தபோது, அதை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டதாகவும் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்: கோப்புப்படம்

மேலும் கனிமொழியின் கணவர் மற்றும் மகன் சிங்கப்பூர் குடிமகன்கள் என்றும் அவர்களின் வருமான விவரங்கள் பொருந்தாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு மாறாக சிங்கப்பூர் அரசு வழங்கிய குடிமக்கள் பதிவுச் சான்றிதழை அவர் இணைத்திருக்க வேண்டும் எனவும், ஆனால் அவர் இணைக்கவில்லை. அதனால் இந்த வேட்புமனு குறைபாடானது என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரச்சாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு கனிமொழி சார்பில் 2,000 ரூபாய் வழங்கியதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மனுவை இன்று (வியாழக்கிழமை) விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மனுவுக்குப் பதிலளிக்கும்படி திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT