டி.ஜி.ரகுபதி
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, பாலமலை, தொண்டாமுத்தூர், நரசீபுரம், ஆணைக்கட்டி, பில்லூர் அணை உள்ளிட்ட பகுதிகளில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப் பகுதிகளிலும், தமிழ்நாடு-கேரளா மற்றும் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டப் பகுதிகளிலும் மாவோயிஸ்ட், நக்சல் ஊடுருவலைத் தடுக்க காவல் துறையின் நக்சல் தடுப்புப் பிரிவினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன், கோவை, நீலகிரி மாவட்ட காவல் துறையினரும் இணைந்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிநவீன துப்பாக்கிகள், பாதுகாப்பு உபகரணங்களுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் காவல் துறையினர். நீலகிரி மாவட்டத்தின் முதுமலை, கேரள மாநிலத்தின் வயநாடு, கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் ஆகிய 3 மாநிலப் பகுதிகள் சந்திக்கும் இடங்களில், தமிழக நக்சல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருடன், கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த நக்சல் தடுப்பு காவல் துறையினரும் இணைந்து கூட்டுச் சோதனையிலும் ஈடுபடுகின்றனர்.
ஒருபுறம் கண்காணிப்பு, ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டாலும், மலைக் கிராம மக்களிடம் நல்லுறவை மேம்படுத்தும் பணியிலும், போலீஸ்-பொதுமக்களிடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையிலும் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வகையில், பழங்குடி மக்களுக்காக கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தத் தொடங்கியுள்ளனர் கோவை மாவட்ட காவல் துறையினர் மற்றும் நக்சல் தடுப்புப் பிரிவினர். இதுகுறித்து காவல் துறை அதிகாரிகளிடம் பேசினோம்.
“மேற்கு மண்டல காவல் துறை தலைவர் கே.பெரியய்யா, கோவை சரக காவல் துறை துணைத் தலைவர் கார்த்திகேயன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோரது உத்தரவின்பேரில், காவல் துறை மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில், பழங்குடியின கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துவருகிறோம்.
பண்டிகை காலங்களில் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களது சிறிய தேவைகளையும் அவ்வப்போது பூர்த்தி செய்து வருகிறோம். இந்த நிலையில், 16 பழங்குடியின கிராமங்களை இணைத்து, 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கோவை மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியில் நடைபெறும் இந்தப் போட்டியில், அரக்கடவு, மானாறு, குழியூர், குண்டூர், குண்டூர்-ஏ, பறையன்கொம்பை, சடப்பட்டி, எழுத்துக்கல் புதூர், முட்புலூர், ஆனைகட்டி, கொடியூர், சுரண்டி, சுண்டப்பட்டி, காளியூர், ஆன்சூர் ஆகிய பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றுள்ளன. கடந்த மாதம் 26-ம் தேதி முதல் லீக் அடிப்படையில் இப்போட்டிகள் வெள்ளியங்காடு மைதானத்தில் நடந்து வருகின்றன.
மலைவாழ் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். லீக் போட்டிகள் தற்போது முடிவடைந்து, 8 அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இனி நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படும்.
விநாயகர் விசர்ஜன ஊர்வலங்கள் முடிந்த பின்னர், காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்படும். காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்று கோப்பை மற்றும் பரிசுகளை வழங்க உள்ளனர்” என்றனர்.
கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் கே.பெரியய்யா கூறும்போது, “காவல் துறை மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் தொடர்கின்றன. அவற்றின் ஒருபகுதியாக, பழங்குடியின இளைஞர்களுக்காக கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.இதுதவிர, கபடி, வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, கேரம் போன்ற பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. தற்போது, கோவை மாவட்ட காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதேபோல, மேற்கு மண்டல மாவட்டங்களில், தேவைப்படும் பழங்குடியின கிராமப் பகுதிகளிலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்” என்றார்.