க.சக்திவேல்
கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில், குறிச்சி குளத்தின் மறுகரையில் உள்ளது குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் போதிய கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லாத நிலையிலும், கடந்த ஆண்டு மண்டல அளவில் நடந்த தேக்வாண்டோ, ஜூடோ, வாள்வீச்சு, நீச்சல் போட்டிகளில் இப்பள்ளி மாணவர்கள் 91 பதக்கங்களை வென்றனர்.ஆனால், அவர்கள் மேற்கொண்டு பயிற்சி
பெற ஏதுவாக, போதிய உபகரணங்கள் இல்லை என்பது குறித்த சிறப்பு செய்தி ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘கொங்கே முழங்கு’ சிறப்பு பக்கத்தில் கடந்த ஜூலை 14-ம் தேதி வெளியானது. இதையடுத்து, வாசகர்கள் பலர் விளையாட்டு உபகரணங்கள் வாங்க பள்ளிக்கு நிதியுதவி அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி, உடற்கல்வி ஆசிரியர் சிவப்பிரகாசம் ஆகியோர் கூறும்போது, “மேட் வாங்க பணமில்லாததால், ஜூடோ பயிற்சியின்போது அடிபடாமல் இருக்க, அட்டைகளுக்குள் தெர்மாகோல் வைத்து ‘மேட்’ போன்று பயன்படுத்தினோம்.
சொட்டுநீர் பாசனக் குழாய்களை வைத்து சண்டையிடச் செய்து, கால்களின் வேகம் அதிகமுள்ள மாணவர்களை வாள்வீச்சுக்குத் தேர்ந்தெடுத்தோம். விடுமுறை நாட்களில் குறிச்சி குளத்தில் நீச்சல் அடிக்கும் மாணவர்களைக் கண்டறிந்து, காந்தி
பார்க்கில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில், நீச்சல் போட்டிக்கான அடிப்படை பயிற்சிகளை மேற்கொள்ளச் செய்தோம். இதை வைத்தே, மாணவர்கள் பதக்கங்களை குவித்தனர்.
இந்நிலையில், ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான செய்திக்குப் பிறகு, திருப்பூர், சோளிபாளையத்தைச் சேர்ந்த ஆர்.வாசுதேவன் ரூ.10 ஆயிரம், கோவை குறிச்சியைச் சேர்ந்த சௌந்தர் ரூ.10 ஆயிரம், கோவை மலை மாநகர அரிமா சங்கம் சார்பில் ரூ.14,700, கோவை சிட்கோ அரிமா சங்கம் சார்பில் ரூ.8 ஆயிரம், ஈரோடு மாவட்டம் ஒத்தகுதிரையைச் சேர்ந்த சதீஷ்குமார் ரூ.6 ஆயிரம், பெருந்துறையைச் சேர்ந்த பி.பி.நடராஜ் ரூ.6 ஆயிரம், கோவை சௌரிபாளையத்தைச் சேர்ந்த கே.சுப்பிரமணியம் ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.57,700 நிதியுதவி அளித்துள்ளனர்.
இந்த தொகையைக் கொண்டு வாள்வீச்சுப் போட்டிக்குத் தேவையான சீருடை, வாள்கள், கவசம், ஜூடோ பயிற்சிக்குத் தேவையான 4 ‘மேட்’களை வாங்கியுள்ளோம். தேவையறிந்து உதவிய அனைவருக்கும் மாணவர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதன்மூலம், மாணவர்கள் மேலும் சிறப்பாக பயிற்சி பெற இயலும்” என்றனர்.