அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவர் அதை மறுத்துள்ளார்.
மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அன்வர்ராஜா. ராமநாதபுரத்தைச் சேர்ந்தவரான அன்வர்ராஜா 2001-ம் ஆண்டு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
அப்போதைய ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆனார். பின்னர் அன்வர்ராஜா அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் அமைச்சராக்கப்பட்டார். பின்னர் மீண்டும் 2003-ம் ஆண்டு நீக்கப்பட்டார்.
2014-ம் ஆண்டு ராமநாதபுரம் மக்களவைக்கு அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட அவர் வென்று எம்.பி ஆனார். ஜெயலலிதாவின் மதிப்பைப் பெற்ற அவர் மக்களவையில் மத்திய அரசு கொண்டுவந்த முத்தலாக் தடைச் சட்டத்தை எதிர்த்து கடுமையாக பேசினார்.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் பாஜகவுடன் அதிமுக நெருங்கினாலும், எம்.பிக்கள் பல நேரம் நெருங்கினாலும் அன்வர்ராஜா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியை பாஜகவுக்கு அதிமுக அளித்தது.
இதனால் அவர் திமுகவுக்கு செல்வார் என தகவல் வெளியானது. ஆனால் ஜெயலலிதாதான் தனது தலைவர் அதிமுகவை விட்டு போகமாட்டேன் எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் இருக்கிறேன் எந்நாளும் கட்சியைவிட்டு போகமாட்டேன், ஜெயலலிதா போன்ற துணிச்சல் மிக்க தலைவர் யாரும் இல்லை, அதேப்போன்று கருணாநிதிக்கு சமமான தலைவர் யாரும் தமிழகத்தில் இல்லை என பேட்டி அளித்திருந்தார்.
ராமநாதபுரம் தொகுதியில் முஸ்லீம் லீக் வென்றது. அன்வர்ராஜா அதுமுதல் ஒதுங்கி இருந்தார். முத்தலாக் மசோதாவை ஓபிஎஸ் ரவீந்திரநாத் ஆதரித்ததை விமர்சித்தார். அவருக்கு டங் சிலிப் ஆகிவிட்டது என பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில் அமமுகவிலிருந்து பலரும் திமுகவில் இணைந்து வருவதும் அவர்களுக்கு நல்ல பதவிகள் அளிக்கப்படுவதும் மேலும் பலர் திமுகவுக்கு வரலாம் என்று கூறப்பட்டது. திமுகவில் இணைய அன்வர்ராஜா முடிவெடுத்திருப்பதாக தற்போது மீண்டும் தகவல் வெளியாகியுள்ளது.
இதை அன்வர் ராஜா மீண்டும் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:
“உயிர் உள்ளவரை புரட்சித்தலைவரின் ரசிகனாக, புரட்சித்தலைவியின் உண்மை தொண்டனாக என்றும் கழக பணியில் A.அன்வர்ராஜா.
அஇஅதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் A.அன்வர்ராஜா திமுகவிற்கு செல்வதாக எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் ஒரு பொய்யான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர், இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது”
என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திமுகவுக்கு செல்லும் தகவலுக்கு அன்வர்ராஜா மீண்டும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.