சென்னை
உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானி மேகாலயா மாநிலத் தலைமை நீதிபதியாக மாற்றப்படுகிறார். மேகாலயா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கொத்தா நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தஹில் ரமானி நியமிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு 03 அன்று அவர் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1958-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பிறந்த நீதிபதி தஹில் ரமானி 1982 ஆம் ஆண்டு முதல் மும்பை மற்றும் கோவாவில் கீழ் நீதிமன்றங்களில் வழங்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.
2001-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் நாள் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 17 ஆண்டுகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பல சிறந்த தீர்ப்புகளை வழங்கிய அவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் சில நாட்களாக தலைமை நீதிபதி தஹில் ரமானி மேகாலய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் எஸ்.என் பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப்.நாரிமன் அடங்கிய கொலிஜியம் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹிலா ரமானியை மேகாலயா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளது.
தனது மாறுதலை பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கோரிக்கையை ஏற்க இயலாது என கொலிஜியம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்து மீண்டும் இடமாறுதலைப் பரிந்துரைத்துள்ளது.
அதேபோன்று மேகாலயா மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டலை (60) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டல் 1958-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சண்டிகரில் பிறந்தவர். 1977-ல் பட்டப் படிப்பையும் 1980-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும் முடித்து பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.
2004-ல் பஞ்சாப்- ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு மே 4-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். பின்னர் கடந்த மே மாதம் 28-ந் தேதி முதல் மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
தற்போதைய கொலிஜியம் பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் பரிசீலித்து அனுமதி வழங்கிய பின் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார். இந்த நடைமுறைகள் முடிய 15 நாட்கள் ஆகும். அதன் பின்னர் நியமன அறிவிப்பு முறைப்படி வரும் என தெரிகிறது.