தமிழகம்

மாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகள் செய்யவேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்,

மாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கிட்டு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், “உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்திற்குச் செல்லும்போது நுழைவுக்கட்டணம் பல்வேறு இடங்களில் தனித்தனியாக வசூலிக்கப்படுகிறது.

ஆனால், நுழைவுக் கட்டணம் வசூலித்தாலும், அதற்கான அடிப்படை வசதிகளான வாகன நிறுத்துமிடம், கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மேலும் வாகனத் திருட்டும் நடைபெறுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியருக்குப் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவரது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாரயணன், சேசஷாயி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மாமல்லபுரத்திற்கு ஏன் உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், மனுதாரரின் புகார் குறித்து 6 வாரத்துக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT