முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து 
தமிழகம்

அமெரிக்காவின்16 நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு: முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ரூ.2780 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

அமெரிக்காவைச் சேர்ந்த 16 நிறுவனங்கள், தமிழகத்தில் ரூ.2780 கோடி முதலீடு செய்ய, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

14 நாட்கள் சுற்றுப் பயணத்தில் முதல் நாள் (29.08.19) சுகாதாரத்துறை தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரண்டாவாது நாளில் (30.08.2019) லண்டன் நாடாளுமன்ற எம்.பி.க்களைச் சந்தித்துப் பேசினார் முதல்வர் பழனிசாமி. இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்ட அரங்கில், தமிழ்நாட்டில் செயல்படுத்தும் சுகாதாரத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்த முதல்வர், நகர உட்கட்டமைப்பு, வீட்டு வசதி, பசுமை எரிசக்தி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என அங்குள்ள தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

3-வது நாளில் லண்டனில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை, எளிய வழியில் மின்கட்டமைப்பில் சேர்ப்பது எப்படி என்பது குறித்து, முதல்வர் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து செப். 1-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில் நேற்று (செப்.3) நியூயார்க்கில் 200-க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். தமிழகத்தில் தொழில் தொடங்கத் தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தரும் என, முதலீட்டாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து ஜீன் மார்ட்டின், ஜோகோ ஹெல்த் உள்ளிட்ட 16 நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ.2780 கோடியை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டு, முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்நிறுவனங்களின் முதலீட்டால் தமிழகத்தில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஹல்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் என்கிற அமெரிக்க நிறுவனம், தமிழகத்தில் 50,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க கொள்கை அளவிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிகளில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோரும் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT