சென்னை
வீட்டில் நுழையவிடாமல் குரைத்த வளர்ப்பு நாயை வெட்டிவிட்டு தப்பிய வழிப்பறி திருடர்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை போரூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ராகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2 நாட்களுக்கு முன்பு, 3 இளைஞர்கள் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, வீட்டில் ராகேஷ் இல்லை. அவரது பாட்டி மட்டும் இருந்துள்ளார். ‘‘ராகேஷ் எங்கே?’’ என்று கேட்டபடியே வந்த 3 பேரும் பாட்டியை தாக்கிவிட்டு, வீட்டுக்குள் நுழைய முயன்றனர்.
அப்போது, அவர்கள் வீட்டில் வளர்த்துவரும் நாய் ஓடிவந்து, 3 பேரை யும் பார்த்து கடுமையாக குரைத்தது. இதில் கோபம் அடைந்த 3 பேரும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நாயின் வாயில் வெட்டினர். இதில் நாயின் மேல் தாடைப் பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் நாய் அலறியபடியே இங்கும் அங்கும் ஓடியது.
நாய் கத்தும் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள், 3 இளைஞர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தகவல் கிடைத்து, போரூர் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நாயை வெட்டிய 3 பேரும் போரூர் சேர்ந்த வெங்கட், முத்து, அருண் என்ற வழிப்பறி திருடர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், சிறுவன் ராகேஷும் அவர்களுடன் சேர்ந்து வழிப்பறி திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளான் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. திருடிய செல்போன், பணத்தை பங்கு பிரிப்பதில் அவர்கள் 4 பேருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த மற்ற 3 பேரும் ராகேஷை பழிவாங்கும் நோக்கில் அரிவாளுடன் அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். நாய் குரைத்ததால், அதை வெட்டிவிட்டு தப்பியதாக 3 பேரும் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸார் கூறினர்.