தமிழக பாஜகவின் புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் ரஜினிகாந்த் பெயரும் அடிபடுவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் 5 ஆண்டுகள் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தனது தலைவர் பதவியை 1-ம் தேதி ராஜினாமா செய்தார். இதனால் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாஜக கட்சி விதிகளின்படி தேசியத் தலைவர் முதல் கிளையின் தலைவர் வரையிலான பதவி கள் 3 ஆண்டுகளைக் கொண்டது. ஒருவர் இருமுறை அதாவது 6 ஆண்டுகள் மட்டுமே அந்த பதவியில் இருக்க முடியும். 2009-ல் மாநிலத் தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 2-வது முறையாக 2012-லும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2015 டிசம்பர் வரை இருந்த நிலையில் 2014-ல் அவர் மத்திய இணை அமைச்ச ரானதால் 2014 ஆகஸ்ட் 16-ம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் மாநிலத் தலைவராக நியமிக்கப் பட்டார். 2015-ல் மீண்டும் அவரே தலைவரானார். அவரது பதவிக் காலம் 2018 டிசம்பரிலேயே முடிந்தாலும் மக்களவைத் தேர்தல் வந்ததால் தலைவர் பதவியில் தொடர்ந்தார்.
தற்போது பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்குமாறு தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். ஆனால், அதற்கு முன்னதாகவே தமிழிசை ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய அளவில் பாஜக முதன்மைக் கட்சி யாக பெரும்பாலான மாநிலங்களில் தேர்தல் வெற்றிகளைக் குவித்தாலும் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் அக்கட்சியால் 3 சதவீத வாக்கு வங்கியை தாண்ட முடியவில்லை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக அனைத்திலும் தோல்வி அடைந்தது. தேசிய அளவில் தனித்து 303 இடங்களில் வென்ற பாஜகவுக்கு 39 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலமான தமிழகத்தில் ஓரிடம் கூட கிடைக்காதது அக்கட்சித் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் பாஜகவால் வளர முடியாததற்கு திராவிட அரசியல், அதிமுக, திமுக ஆகிய இரு மாநில கட்சிகளின் செல்வாக்கு ஆகியவை காரணமாக கூறப்பட்டாலும் மக்கள் செல்வாக்கு கொண்ட, மக்களை ஈர்க்கும் தலைவர்கள் இல்லாததும் முக்கிய காரணம் என்ற கருத்தும் நிலவுகிறது. 20 ஆண்டுகள் மாநில அமைப்பு பொதுச்செயலாளர், 2006 முதல் 2009 வரை மாநிலத் தலைவராக இருந்த இல.கணேசனும் 1998 முதல் 2004 வரை எம்பி, 2003 முதல் 2006 வரை மாநிலத் தலைவராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனும் இரு முறை எம்.பி., இரு முறை மத்திய இணை அமைச்சர், இரு முறை மாநிலத் தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனும் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை உயர்த்த முடியவில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, ஊடகங்கள், சமூக ஊடகங் களில் பேசப்படுபவராக, விமர்சிக்கப்படுவராக பிரபலமாக இருந்தாலும் அவர் தலைமையில் சந்தித்த 2016 சட்டப்பேரவைத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தலில் ஓரிடத்தில் கூட பாஜகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில் புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்ய தேசியத் தலைவர் அமித்ஷா, தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய பொதுச்செயலாளரான தமிழகப் பொறுப்பாளர் பி.முரளிதரராவ், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், நயினார் நாகேந்திரன், து.குப்புராமு, கனக சபாபதி, மதுரை சீனிவாசன் என மாநில நிர்வாகிகளில் பலர் தலைவர் பதவிக்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை விடுத்து புதியவர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கருத்தும் அக்கட்சிக் குள் உள்ளது. ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2000-ம் ஆண்டு தலித் சமுதா யத்தைச் சேர்ந்த புதியவரான டாக்டர் கிருபாநிதி மாநிலத் தலைவராக்கப்பட்டார். அதனால் அக்கட்சிக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. எனவே, புதியவரை நியமிப்பதிலும் கட்சி மேலிடத்துக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தனிக்கட்சி தொடங்கி 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தை தமிழக பாஜகவின் தலைவராக்க வேண்டும் என்ற குரலும் கட்சிக்குள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
ஆன்மிக அரசியல் என்று அறிவித்துள்ள ரஜினி பாஜகவின் கொள்கைகளோடு ஒத்துப்போகக் கூடியவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் பேசிய ரஜினி, ‘‘பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் கிருஷ்ணர் - அர்ஜுனர் போன்றவர்கள்’’ என புகழ்ந்தார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை துணிச்சலான நடவடிக்கை எனவும் பாராட்டினார்.
எனவே, தமிழக பாஜக தலைவராக ரஜினி ஒப்புக்கொண்டால் அது அக்கட்சியின் வளர்ச்சிக்கு உதவும். தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து பாஜகவில் பலரிடம் உள்ளது. ஆனால், தமிழக அரசியல் சூழலில் பாஜக தலைவராக ஒப்புக் கொள்வது சாத்தியமற்றது என்பதும் பாஜகவில் விவாதப் பொருளாகி உள்ளது.
அடுத்த பாஜக தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ரஜினி பாஜக மாநிலத் தலைவராக அறிவிக்கப்படுவார் என்று வரும் செய்தி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.