தமிழகம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்ற ராமநாதபுரத்தில் இருந்து புதுச்சேரிக்கு 4.30 மணிநேரத்தில் பறந்த ஆம்புலன்ஸ்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்ற ராமநாதபுரத்திலிருந்து புதுச்சேரிக்கு 4 மணிநேரம் 30 நிமிடங்களில் அழைத்துச் சென்ற தமுமுகவின் மருத்துவச் சேவை பிரிவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தைச் சேர்ந்த நயினா முகம்மது என்பவரது மகன் முகம்மது அமீருல் (13). இவர் முதுகு தண்டுவடப் பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட முகம்மது அமீருலை அவரது பெற்றோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

திங்கட்கிழமை முகம்மது அமீருலைப் பரிசோதித்த ராமநாதபுரம் மருத்துவர்கள் உடனடியாக 8 மணிநேரத்திற்குள் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளனர்.

ராமநாதபுரத்திலிருந்து புதுச்சேரிக்கு எட்டு மணி நேரத்தில் எப்படி சிறுவன் முகம்மது அமீருலை கொண்டுசெல்வது என்று அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்திலேயே கதறி அழுதனர்.

இந்தத் தகவல் கிடைத்த உடன், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மருத்துவ சேவை பிரிவினர் சிறுவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டனர்.

ராமநாதபுரத்திலிருந்து புதுச்சேரி வரை உள்ள தமுமுகவின் அனைத்து ஆம்புலன்ஸ் ஒட்டுநர்களுக்கும் தகவல் உடனே சொல்லப்பட்டது. வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இதுகுறித்துத் தெரிவித்தனர்.

சிறுவனைஅழைத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகு திங்கட்கிழமை மாலை 6.20 மணியளவில் ஆம்புலன்ஸ் நம்பிக்கையுடன் புறப்பட்டது.

ஆம்புலன்ஸை ஓட்டுநர் முகம்மது ஜாஸ் என்பவர் ஓட்டினார். ஆம்புலன்ஸுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க மற்ற வழியில் மற்ற தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். மேலும் காவல்துறை, பொதுமக்கள், சமூக ஊடக நண்பர்கள் என அனைவரும் பாதையைக் கடக்க உதவினர்.

சரியாக இரவு 10.40 மணிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்தனர். தற்போது அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தை 4.30 மணி நேரத்தில் கடந்து, உயிருக்குப் போராடிய சிறுவனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். வழக்கமான வேகத்தில் சென்றால் 7 1/2 மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்கள், சிறுவனுக்கு தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆம்புலன்ஸை ஓட்டிய முகம்மது ஜாஸ், "தமிழகம் முழுவதும் தமுமுக சார்பாக 151 ஆம்புலன்ஸ் அவசர கால ஊர்திகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த அனுபவத்தின் வாயிலாகவே இந்த அசாத்தியப் பயணம் சாத்தியமாயிற்று” என்றார்.

குறிப்பிட்ட நேரத்தில் சிறுவனின் உயர் சிகிச்சைக்கு உதவிய தமுமுகவின் மருத்துவச் சேவை பிரிவினர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், காவல்துறையினருக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

எஸ். முஹம்மது ராஃபி

          
SCROLL FOR NEXT