தமிழகம்

கந்துவட்டி கொடுமை: ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த 70 வயது மூதாட்டி 

செய்திப்பிரிவு

ராமேசுவரம்

கந்துவட்டி கொடுமையால் துபாயில் உயிரிழந்த மீனவரின் 70 வயது தாய் ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.

ராமேசுவரம் ராமகிருஷ்ணாபுரம் மீனவர் காலனியைச் சேர்ந்த நம்பு முருகன் என்பவர் கடந்த 2015-ம் வருடம் ஜூன் மாதம் மீன்பிடி ஒப்பந்த கூலியாக துபாய் சென்றார்.

அங்கு பணிபுரிந்து வந்த அவர் கடந்த 02.12.2017 அன்று துபாயில் உள்ள அமேரியா கடற்பகுதியில் மீன் பிடித்துக கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்துவிட்டார்.

சில மணி நேர தேடலுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப் பட்டு பிரேத பரிசோதனைக்காக துபாய் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் தகவல் அறிந்ததும் நம்பு முருகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரக் கோரி அவரது தாயார் முனியம்மாள் (70) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடமும், ராமேசுவரம் மீன் துறை இயக்குனரிடமும் மனு கொடுத்தார். ஆனால் இது குறித்து எவ்விதமான நடவடிக்கையும் இதுவரையிலும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ராமேசுவரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக செவ்வாய்கிழமை கந்து வட்டி கொடுமையிலிருந்து காப்பாற்றக் கோரி நம்பு முருகனின் தாயாருக்கு தஞ்சம் அளிக்கக் கோரும் போராட்டத்தை நடத்தினர்.

இதுகுறித்து முனியம்மாள் (70) செய்தியாளர்களிடம் கூறும்போது, "எனது மகன் நம்பு முருகன் துபாய் செல்வதற்காக வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். துபாயில் தொழில் செய்த காலத்தில் மகன் அனுப்பிய சம்பளப் பணம் முழுவதுதையும் வட்டிக்கே கொடுத்துள்ளேன்.

இதுவரையிலும் அசலைவிடவும் அதிக வட்டியை பெற்றுக்கொண்டுள்ளனர். நம்புமுருகன் இறந்த பின்னர் இறப்புச் சான்று, பிணக்கூராய்வு சான்று உள்ளிட்ட எவ்விதமான ஆவணமும் இல்லாததால் அரசின் எவ்வித நிவாரணங்களும் பெற முடியவில்லை.

இந்நிலையில் கந்துவட்டி கும்பல் தொடர்ந்து வட்டி கேட்டும், எனது வீட்டை காலி செய்யச் சொல்லி மிரட்டியும் வருகின்றனர். தனுஷ்கோடி காவல் நிலையத்தில்புகார் செய்தும் காவல்துறையினர் கந்துவட்டி கும்பலுக்கு சாதகமாகவே கட்டப்பஞ்சாயத்து பேசினார்கள்" என்றார்.

இது குறித்து தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.ஆர். செந்தில் வேல், "இலங்கை கடற்படை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் அழிந்து வரும் சூழ்நிலையில் பஞ்சம் பிழைக்க வெளிநாட்டு மீன்பிடி கூலிகளாக செல்லும் மீனவர் குடும்பங்கள் கந்து வட்டி கும்பல்களிடம் சிக்கிக் கொள்கின்றனர்.

இறந்த மீனவர் நம்பு முருகனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் பெற்றுத் தரவேண்டும், மேலும் இறந்த மீனவர் குடும்பத்தை கந்துவட்டிக் கும்பலிடம் இருந்து காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்றார்.

முனியம்மாளிடம் வட்டாட்சியர் ஜாஃபர் இறந்த மீனவருக்கு உரிய நிவாரணமும் வழங்கிடவும், கந்துவட்டி கும்பல் மீது கந்து வட்டி சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் தஞ்சம் அளிக்கக் கோரும் போராட்டத்தை தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் கைவிட்டனர்.

- எஸ். முஹம்மது ராஃபி

SCROLL FOR NEXT