தமிழகம்

நெல்லையில் விவசாய நிலங்களில் இரட்டை ரயில் பாதை பணிக்கு எதிர்ப்பு: 12 சதவீத வட்டியுடன் இழப்பீடு வழங்க ஒப்புதல்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி,

முன்னறிவிப்பு ஏதும் இன்றி, இழப்பீடு வழங்காமல் விவசாய நிலங்களில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இதன் எதிரொலியாக, நிலத்தை அளவீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை முன் தேதியிட்டு 12 சதவீத வட்டியுடன் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

மதுரை- கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம், மருதம் நகரில் இரண்டாவது ரயில் பாதை அமைப்பதற்காக விவசாய நிலங்களில் மண்ணை கொட்டி மேடாக்கி, பணிகள் நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே உள்ள தண்டவாளம் அருகில் சுமார் 30 அடி அகலத்துக்கு விவசாய நிலங்களில் இப்பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால், 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். ரயில்வே நிர்வாகம் முன்னறிவிப்பு ஏதும் கொடுக்காமல், தங்கள் விவசாய நிலங்களில் பணிகள் செய்வதாகவும், இதற்கு இழப்பீடு ஏதும் வழங்கவில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் மனுவும் அளித்தனர். இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதால், இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இன்று(செவ்வாய்க்கிழமை) பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

திட்டமிட்டபடி முன்னீர்பள்ளம், மருதம் நகரில் விவசாயிகள் திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராஜகுரு தலைமையில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் முருகன், வரகுணன், கிருஷ்ணன், கென்னடி மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, வருவாய்த்துறை மற்றும் ரயில்வேத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காணலாம் என கூறி சமாதானப்படுத்தினர். இதனை ஏற்று, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. விவசாயிகள் சங்க நிர்வாகிகள், வருவாய்த்துறை, ரயில்வேத் துறை, காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

இதில், நிலத்தை அளவீடு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை முன் தேதியிட்டு 12 சதவீத வட்டியுடன் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக நீர் வரத்து மடைகளை ஆங்காங்கே அடைத்து வைத்திருப்பதை உடனடியாக விவசாய பணிகளுக்காக திறந்து விட வேண்டும் என்றும் விவசாயிகள் கூறினர். இதற்கு அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தாமதமின்றி பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வரை பணிகளை தொடங்கக் கூடாது என்றும் இதை மீறி பணிகளை தொடங்கினால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் கூறினர்.

த.அசோக்குமார்

SCROLL FOR NEXT