புதுச்சேரி சட்டப்பேரவை: கோப்புப்படம் 
தமிழகம்

புதுச்சேரியில் துணை சபாநாயகர் பதவிக்கு வரும் 5-ம் தேதி தேர்தல்: சபாநாயகர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி

துணை சபாநாயகர் பதவிக்கு வரும் 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து வாரியத்தலைவர் பதவியை காங்கிரஸ் எம்எல்ஏ பாலன் ராஜினாமா செய்தார்.

புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு துணை சபாநாயகர் சிவக்கொழுந்து தேர்வு செய்யப்பட்டார். இதனால், காலியான துணை சபாநாயகர் பதவிக்கு உழவர்கரை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ எம்.என்.ஆர்.பாலன் பெயர் பரிசீலனையில் உள்ளது.

இச்சூழலில் இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டப்பேரவையில் சபாநாயகர் சிவக்கொழுந்து வரும் 5-ம் தேதி துணை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல் நடக்கும் என்று அறிவித்தார்.

இதையடுத்து புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக வாரியத்தலைவராகவும் காங்கிரஸ் எம்எல்ஏவாகவும் உள்ள பாலன், தனது வாரியத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை முதல்வர் நாராயணசாமியிடம் அளித்தார். இதன்மூலம் துணை சபாநாயகர் தேர்தலில் அவர் போட்டியிட உள்ளது உறுதியாகியுள்ளது.

செ.ஞானபிரகாஷ்

SCROLL FOR NEXT