மதுரை
தமிழிசை மீதான புதுவை முதல்வர் நாராயணசாமியின் விமர்சனத்துக்கு பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற சிறப்பும் தமிழிசைக்குக் கிடைத்துள்ளது.
இதற்காக ஆளுநர் தமிழிசைக்கு தமிழகத்தின் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக நேற்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, ''தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருப்பதில் சர்க்காரியா கமிஷனின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இந்த நியமனம் ஜனநாயகத்துக்குப் புறம்பான செயல்'' என்று விமர்சித்திருந்தார்.
புதுவை முதல்வரின் விமர்சனத்துக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழிசை என்னுடைய சிறந்த தோழி. ஆளுநராக உள்ள அவருக்கு எனது வாழ்த்துகள்.
எந்த அடிப்படையில் இந்தப் பதவி கிடைத்துள்ளது என்று கேட்டால், 25, 30 ஆண்டுகளாக அவர் அரசியலில் உள்ளார். ஒரு கட்சியின் மாநிலத் தலைவர், பல ஆண்டுகளாக உழைத்திருக்கிறார்.
அரசியலில் அவருடைய உழைப்புக்கும் நம்பிக்கைக்கும் பலனாக ஆளுநர் பதவி கிடைத்துள்ளது. இதை நிச்சயமாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும். குறிப்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விரைவில் பதிலளிக்கும். இதற்கு முன்பு சர்க்காரியா கமிஷன் விதிமுறைகளைப் பின்பற்றித்தான் ஆளுநர் நியமனம் செய்யப்பட்டதா?'' என்று கேள்வி எழுப்பினார் பிரேமலதா.