தமிழகம்

குரூப் 4 தேர்வு: விருதுநகர் மாவட்டத்தில் 59,662 பேர் எழுதினர்

செய்திப்பிரிவு

விருதுநகர்,

குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 59,662 பேர் தேர்வு எழுதினர்.

தமிழக அரசுத் துறைகளில் குரூப்-4 பணியிடங்களான கிராம நிர்வாக அதிகாரி (விஏஒ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர் உட்பட 6,491 காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிட்டது. இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 14-ம் தேதி கடைசி நாளாகும். இதன்படி, இந்தத் தேர்வுக்கு மொத்தம் 17 லட்சம் பேர் வரை விண்ணப்பித்தனர். தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் ஆகஸ்ட் 22-ம் தேதி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு வெளியானது.

இதன் தொடர்ச்சியாக எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. மதியம் 1 மணி வரை இத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 301 தாலுகா மையங்களிலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகரில் 9,695 பேரும் அருப்புக்கோட்டையில் 9,111 பேரும், காரியாபட்டியில் 2,884 பேரும், ராஜபாளையத்தில் 11,013 பேரும், சாத்தூரில் 5,271 பேரும், சிவகாசியில் 9,184 பேரும், திருவில்லிபுத்தூரில் 10,032 பேரும், திருச்சுழியில் 1,478 பேரும், வெம்பக்கோட்டையில் 994 பெரும் என விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 156 மையங்களில் 59,662 பேர் தேர்வு எழுதினர். விருதுநகரில் உள்ள பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் சிவஞானம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT