தமிழகம்

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்

செய்திப்பிரிவு

தமிழக பாஜக தலைவராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாட்டிலேயே பாஜகவின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒரே பெண் தமிழிசை சவுந்தரராஜன். நாகர்கோவிலில் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தில், குமரி அனந்தனின் ஐந்து குழந்தைகளில் தலைமகளாக, 1963 ஜூன் 2-ல் பிறந்தவர் தமிழிசை.

சிறுவயதிலேயே நாளிதழ்களை வாசிப்பது, வீட்டு நூலகத்திலிருந்து அப்பா சொல்லும் புத்தகத்தை எடுத்துக்கொடுப்பது, பள்ளிக்கூட கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்பது என்றிருந்திருக்கிறார் தமிழிசை. 1980-ல் எம்எல்ஏவான குமரி அனந்தன், அரசினர் தோட்டத்தில் குடியேறியதால் கருணாநிதி, எம்ஜிஆர், மபொசி போன்ற அரசியல் ஆளுமைகளைப் பார்க்கவும், அவர்களின் பேச்சைக் கேட்கவும் வாய்ப்பாக அமைந்தது.

எம்ஜிஆர் சிபாரிசால் தமிழிசைக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. முதலாமாண்டு படித்தபோதே சவுந்தரராஜனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணவிழாவில் எம்ஜிஆர், கருணாநிதி, பக்தவத்சலம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். கணவர், மகன் சுகநாதன், மகள் பூவினி, மருமகள் திவ்யா என்று குடும்பமே மருத்துவக் குடும்பம்தான்!

குமரி அனந்தன் 1992-ல் 45 நாள் பாதயாத்திரை போனபோது அவருக்கும், கட்சியினருக்கும் மருத்துவ உதவி செய்வதற்காக, கைக்குழந்தையுடன் சென்றவர் தமிழிசை. ‘பெண் சக்தி’ என்ற பெயரில் தொண்டு நிறுவனமும் நடத்தினார். ஆனாலும், காங்கிரஸ் கட்சியில் அவர் உறுப்பினராகச் சேரவில்லை. ராஜ் டிவியில் குமரி அனந்தன் நடத்திவந்த ‘நீங்களும் பேச்சாளராகலாம்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராகத் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார் தமிழிசை. பிரதமர் வாஜ்பாய் உண்டாக்கிய ஈர்ப்பு பாஜக பக்கம் திருப்பியது.

பாஜகவில் சேர உற்சாகப்படுத்தியது கணவர்தான். தன்னைச் சந்திக்க வீட்டுக்கு வந்த தமிழக பாஜக துணைத் தலைவர் மருத்துவர் கிருபாநிதியைத் தமிழிசைக்கு அறிமுகப்படுத்திவைத்தார் சவுந்தரராஜன், “பாஜகவில் மாவட்டத் தலைவர் மூலம்தான் உறுப்பினர் அட்டை வாங்க முடியும்” என்று கிருபாநிதி சொல்ல, தென்சென்னை மாவட்டத் தலைவர் ‘லேலண்ட்’ சீனிவாசனைச் சந்தித்து 1999-ல் பாஜக உறுப்பினரானார் தமிழிசை!

தமிழிசை பாஜகவில் சேர்ந்தது விமர்சனத்துக்குள்ளானது. கோபத்தில் குமரி அனந்தன் பேசுவதை நிறுத்திக்கொண்டார். பாஜகவிலும் யாரும் இவரை நம்பவில்லை. அலுவலகத்துக்குள் நுழைந்தால் தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பவர்கள்கூட சட்டென்று பேச்சை நிறுத்திவிடுவார்களாம். தன் செயல்பாட்டின் மூலம் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றார் தமிழிசை. “டாக்டர் நீங்க எங்களுக்கு கடவுள் மாதிரி” என்று வாழ்த்துகளையே கேட்டுப்பழகிய தமிழிசை, அந்த கிரீடத்தைக் கழற்றிவைத்துவிட்டு கட்சியில் மாவட்டத் தலைவர் போடும் உத்தரவுக்கும் தலைவணங்குகிற ஊழியராகப் பணியாற்றினார்.

பாஜகவின் வேர் ஆர்எஸ்எஸ்தான் என்பதை சற்று தாமதமாகத்தான் தெரிந்துகொண்டார். பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளராக இருந்த சூரியநாராயண ராவை சேத்துப்பட்டு ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் வாரந்தோறும் சந்தித்து, உடல் நலம் விசாரித்தார். அதன் பிறகே தமிழிசையின் எதிர்காலம் துலக்கமானது. கட்சி உறுப்பினரான 15 ஆண்டுகளில் மாநிலத் தலைவராகிவிட்டார் தமிழிசை. தற்போது, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

நான்கு முறை தேர்தலில் போட்டியிட்டும் மக்கள் பிரதிநிதியாகவில்லை என்றாலும், காங்கிரஸுக்கு நிகரான கோஷ்டி அரசியல் நிறைந்த இயக்கத்தில், ஒரு பெண் தலைவராக தமிழிசை தன்னைத் தற்காத்துக்கொண்டதே பெரிய சாதனை. மக்கள் பிரதிநிதியாக முடியாவிட்டாலும், கமலாலயத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் ‘மக்கள் சந்திப்பு’ என்ற பெயரில், பொதுமக்களிடம் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களைப் பெறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தராஜன் போட்டியிட்டார். திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார். தமிழிசை தோல்வியைத் தழுவினாலும் மனம் தளராமல் தொடர்ந்து கட்சிப் பணி ஆற்றி வருகிறார்.

2014 முதல் தமிழக பாஜக தலைவராக உள்ள தமிழிசை சவுந்தராஜனின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்தில் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று தெரிகிறது.

தமிழக தலைவர் ஒருவர் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதும், பெண் தலைவர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதும் தேசிய அரசியலில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT