தமிழகம்

கடந்த 4 ஆண்டுகளில் 19 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.478 கோடி உதவித்தொகை: அமைச்சர் ப.மோகன் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 19 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.478.61 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார்.

தொழிலாளர் துறை செயல் பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் அமைச்சர் ப.மோகன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அமைச்சர் பேசியதாவது:

பணியாளர்கள் இழப்பீட்டுச் சட்டம், பணிக்கொடைச் சட்டம், பிழைப்பூதியச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு பணப்பலன் கள் அளிக்கும் சட்டங்களின் கீழ் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் மீது முக்கியத்துவம் அளித்து, உரிய காலத்துக்குள் உத்தரவு வழங்க வேண்டும்.

தொழில் தகராறுகள் சட்டத்தின்கீழ் வேலை நிறுத்தம் அல்லது கதவைடைப்பு போன்ற சம்பவங்கள் நடக்காமல் துறை அலுவலர்கள் தடுக்க வேண்டும். நுகர்வோர் நலன்களை பாதுகாக்கும் வகையில், பொது விநியோக திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் பொருட்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விநியோகம் சரியான அளவில் இருப்பதை தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளில் 12 லட்சத்து 17 ஆயிரத்து 207 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். 19 லட்சத்து 6 ஆயிரத்து 54 பயனாளிகளுக்கு ரூ.478 கோடியே 61 லட்சம் அளவுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஜூன் மாதம் மட்டும் 24 ஆயிரத்து 841 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்து 96 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 67 லட்சத்து 67 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

SCROLL FOR NEXT